ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 07-ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்போது, 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது.
குறித்த போர் காரணமாக 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வரை 75 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த போர் சூழல் காரணமாக காசாவில் முதல்முறையாக பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐநா ஆதரவு பெற்ற உணவு பாதுகாப்பு அமைப்பு(The Integrated Food Security Phase Classification (IPC) ) ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது, காசா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பஞ்சம் நிலவி வருவதாகவும், அங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, டெயின் அல் பலா மற்றும் கான் யூனிஸ் நகரிலும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பஞ்சம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. காசாவில் மட்டும் 05 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமை, பட்டினி மற்றும் மரணம் என்ற அபாய நிலையில் உள்ளதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
காசா நகரில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் 05-இல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடால் அவதிப்பட்டு வருவதாக கூரப்பப்டுகிறது, மேலும், கர்ப்பணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் தேவையான ஊட்டச்சத்து உணவு கிடைக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.