எம்ஜிஆரை அடுத்து யாருக்கும் கிடைக்காத வெற்றி.. விஜயகாந்துக்கு மட்டுமே.. கேப்டனின் 100வது படம் 'கேப்டன் பிரபாகரன்' ரீரிலீஸ்..!
Tamil Minutes August 23, 2025 02:48 PM

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 100-வது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’, அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஆகஸ்ட் 22, 2025 அன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 4K தொழில்நுட்பத்துடன் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மறுவெளியீட்டை, ரசிகர்கள் மட்டுமல்லாமல், இன்றைய தலைமுறையினரும் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்று, திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

மறுவெளியீட்டில் புதிய உற்சாகம்

நடிகர் விஜயகாந்த் காலமான பிறகு வெளியான இந்தப் படம், அவரது நினைவாக கொண்டாடப்படும் ஒரு பெரும் நிகழ்வாக மாறியுள்ளது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படத்தை 4K தரத்தில் கண்ட ரசிகர்கள், படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும், குறிப்பாக சண்டைக்காட்சிகளும், இன்றும் தத்ரூபமாக இருப்பதாக பாராட்டுகிறார்கள். ஆர்.கே. செல்வமணி அவர்களின் அற்புதமான திரைக்கதையும், விஜயகாந்தின் நேர்த்தியான நடிப்பும் படத்தை காலத்தால் அழியாத படைப்பாக நிலைநிறுத்தியுள்ளன.

வரலாற்றை மாற்றிய ‘100-வது படம்’

திரையுலகில் ஒரு நடிகரின் 100-வது படம் வெற்றி பெறுவது என்பது ஒரு சவாலான விஷயமாகவே இருந்துள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த ‘ஒளிவிளக்கு’ மற்றும் கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகிய இரண்டு படங்களை தவிர்த்து, பல முன்னணி நடிகர்களின் 100-வது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசன்: ‘நவராத்திரி’

கமல்ஹாசன்: ‘ராஜபார்வை’

ரஜினிகாந்த்: ‘ஸ்ரீ ராகவேந்தர்’

சத்யராஜ்: ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’

பிரபு: ‘ராஜகுமாரன்’

கார்த்திக்: ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’

அர்ஜுன்: ‘மன்னவர் சின்னவர்’

சரத்குமார்: ‘தலைமகன்’

முரளி: ‘கவசம்’

இந்த நடிகர்களின் நூறாவது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், விஜயகாந்த் தனது ‘கேப்டன் பிரபாகரன்’ மூலம் இந்த வரலாற்றை மாற்றியமைத்தார். இன்றைய தலைமுறை நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்றோர் 100 படங்கள் நடிப்பது கூட சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கும்போது, விஜயகாந்தின் இந்த சாதனை சினிமா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

படத்தின் வெற்றிக்குக் காரணம்

சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், லியாகத் அலிகான் எழுதிய வசனங்கள், கேப்டனின் கம்பீர குரலில் அனல் பறக்க்கும். குறிப்பாக நீதிமன்றத்தில் அவர் பேசிய காட்சிகள், இன்றும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிப்பது போல் இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன.

கேப்டன் ஒரு அரசியல்வாதியாக தோல்வி அடைந்திருக்கலாம், ஆனால் அவரது சாதனை சினிமாவில் என்றென்றும் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Author: Bala Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.