நெல்லையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ராகுல்காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது” என்று கடுமையாக விமர்சித்தார். அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவரான கே. செல்வப்பெருந்தகை, அமித்ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:“இந்த நாடு ஜனநாயக அடிப்படையில் இயங்கும் நாடாகும். பிரதமர் யார் ஆக வேண்டும் என்பதை மக்களின் வாக்குகள் தான் தீர்மானிக்கும். ஒன்றிய உள்துறை அமைச்சர் ஒருவரின் கருத்தோ, தாழ்வான அரசியல் விமர்சனமோ அதை முடிவு செய்யாது.
இன்று நாடு முழுவதும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என கோடிக்கணக்கான மக்கள் ‘நியாயம், சமத்துவம், சமூக நீதி’ என்பவற்றையே தங்களது அரசியல் இலட்சியமாகக் கொண்டு வருகின்றனர். அந்த இலட்சியங்களுக்காகவே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போராடி வருகிறார்.
நீதி, அன்பு, சமத்துவம் ஆகியவற்றின் குரலாக இருப்பவரை மக்கள் பிரதமராக தேர்வு செய்வார்களா, இல்லையா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். வரலாறு சொல்லும் ஒரே உண்மை என்னவெனில், மக்களின் விருப்பத்தை யாராலும் தடுக்க முடியாது என்பதே.
உண்மையில், அமித்ஷா கூறிய இந்த மாதிரியான கருத்துக்கள், ஆளும் கட்சியின் தோல்விப் பயத்தையே வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், ராகுல்காந்தி தான் நாளைய பிரதமர் என்பதற்கான உறுதியையும் காட்டுகின்றன.”இவ்வாறு செல்வப்பெருந்தகை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.