ரயில் பயணிகளிடம் பணம் பறிக்க முயன்ற போலி டிக்கெட் பரிசோதகரைக் கைது செய்து, மேற்கொண்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, சென்னை, குஜராத், அஜ்மீர், அயோத்தி, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16617) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரயிலின் சாதாரண வகுப்பு பெட்டியில் ஒரு நபர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். அப்போது அதே ரயிலில் டிக்கெட் பரிசோதனையில் திருச்சி கோட்டத்தை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் கே.எம்.சரவணன் என்பவர் ஈடுபட்டிருந்தார்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் அவர் முன்பதிவில்லாத பெட்டியில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே ஒருவர் டிக்கெட்டை சரிபார்த்து விட்டார் என்று பயணிகள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த டிக்கெட் பரிசோதகர் சம்பந்தப்பட்ட நபரிடம் அடையாள அட்டை மற்றும் டிக்கெட் பரிசோதகருக்கான ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால் அவர் தனது அடையாள அட்டையைத் தர மறுக்கவே ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும், திருச்சி ரயில்வே கோட்ட வர்த்தக கட்டுப்பாட்டு பிரிவுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே மானாமதுரைக்கு ரயில் வந்தடைந்தது. அங்கு அவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர் காட்டுபரமக்குடி தெளிச்சாத்தநல்லூரை சேர்ந்த ராம்பிரகாஷ் என்பதும், போலி டிக்கெட் பரிசோதகர் என்பதும் பயணிகளிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது. அதன் பின்னர் அவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?