நோயாளிகளின் உயிர்களை தங்களது உறுப்பு தானத்தால் காப்பாற்றி மறுவாழ்வளிக்க தாராளமான மனதுடனும், கருணை உள்ளத்துடனும் தங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய உறுப்பு கொடையாளர்களைப் போற்றும் விதமாக, இன்று எம்ஜிஎம் ஹெல்த்கேரில் உறுப்பு தானம் செய்தவர்கள கௌரவித்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.கே. மோகன் மற்றும் நடிகை திருமதி நீலிமா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் நோக்கில், 'உயிர்களுக்காக மைல்கள்' (Miles for Lives) என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட்ட நடைப்பயணத்தையும் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.கே. மோகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் கல்லீரல் நோய்கள், மாற்று அறுவை சிகிச்சை மற்றும் HPB அறுவை சிகிச்சை மையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுகள், உடல் உறுப்பு, கண் மற்றும் திசு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின; அத்துடன் உறுப்புதானம் செய்வதற்கு கொடையாளர்களாகப் பதிவு செய்ய மக்களை ஊக்குவித்தன. இந்த நடைப்பயணம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேரில் தொடங்கி, அண்ணா நகர் டவர் பார்க்கில் நிறைவடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேரின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் கூறுகையில், “கொடையாளர்களைப் பாராட்டும் நிகழ்வையும், 'உயிர்களுக்காக மைல்கள்' நடைப்பயணத்தையும் ஏற்பாடு செய்து நடத்துவதில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் பெருமிதம் கொள்கிறது. மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியால், உயிருடன் இருப்பவர் மற்றும் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து செய்யப்படும் உறுப்பு தானங்கள் பாதுகாப்பானவையாகவும், தானம் பெற்ற நபர்களிடம் திறம்பட செயல்படுபவையாகவும் மாறியுள்ளன. இருப்பினும், அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில், ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 40-க்கும் மேற்பட்டோர் உறுப்பு தானம் செய்கிறார்கள்; நம் நாட்டில் இந்த விகிதம் ஒரு மில்லியனுக்கு ஒரு நபர் என்ற அளவுக்கும் குறைவாகவே உள்ளது. உயிருடன் உள்ள கொடையாளர்கள் ஒரு சிறுநீரகத்தையோ அல்லது கல்லீரலின் ஒரு பகுதியையோ தானம் செய்வதன் மூலம் கொடையாளர், பெறுநர் இருவருமே ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். மூளைச்சாவு அடைந்த கொடையாளர்களின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கணையம், கருவிழிகள் போன்ற உறுப்புகள் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள அல்லது தேவையிலுள்ள பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். இதற்கு மருத்துவ ரீதியில் சாத்தியக்கூறுகள் தடையாக இருப்பதில்லை; மாறாக சமூகத்தில் மக்களிடையே நிலவுகின்ற தயக்கமும், உறுப்புதானம் பற்றி போதிய விழிப்புணர்வு இன்மையுமே முக்கியத் தடைகளாக உள்ளன” என்று குறிப்பிட்டார்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் கல்லீரல் நோய்கள், மாற்று அறுவை சிகிச்சை மற்றும் HPB அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குநரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் தியாகராஜன் சீனிவாசன் கூறுகையில், “உடல் உறுப்பு தானம் நவீன மருத்துவத்தின் மிகச் சிறந்த கொடைகளில் ஒன்றாகும். ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையை எப்படி மீட்டுத் தரலாம் என்பதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. கல்லீரலுக்கு இயல்பாகவே மீண்டும் வளரும் அபாரத் தன்மை இருப்பதால், உயிருடன் உள்ளவர் மற்றும் இறந்த கொடையாளரிடமிருந்து பெற்று செய்யப்படும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. இதன் மூலம் உறுப்பைப் பெறுபவர்களில் பெரும்பாலானோர் முழுமையான, பயனுள்ள வாழ்க்கையை வாழ்கின்றனர். மூளைச்சாவு அடைந்த கொடையாளர்களே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றனர். இருப்பினும், இதயச் செயலிழப்பிற்குப் பிறகு தானம் செய்யப்படும் உறுப்புகளும் உலகளவில் உறுப்புமாற்று சிகிச்சையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் உடலுறுப்புகளுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த இரண்டு வழிமுறைகளையும் நாம் பரவலாக ஊக்குவிக்க வேண்டும். இதற்காக, பயிற்சி பெற்ற குழுக்கள், மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் வலுவான நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய சிறந்த, நிலைப்புத்தன்மையுள்ள உறுப்புமாற்று அறுவை சிகிச்சை திட்டங்களை உருவாக்க மருத்துவமனைகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்” என்று விளக்கமளித்தார்.