அனில் அம்பாணி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான அனில் அம்பானியின் குழுமத்தின் கீழ் உள்ள RAAGA நிறுவனம் யெஸ் (YES)வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளது. 2017 - 2019 இடைப்பட்ட காலத்தில் ரூ.12,800 கோடி கடன் பெற்றிருந்த நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. அத்துடன் கடனில் ரூ. 3 ஆயிரம் கோடியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. கடன் தொகையையும், வட்டியையும் திருப்பி செலுத்துவதில் மோசடி செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே பணமோசடி வழக்கு தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியும் அனில் அம்பானி மோசடி நபர் என அறிவித்தது. எஸ்பிஐ வங்கி அறிவித்த அடுத்த நாளே, (ஜூலை 24 அன்று) அனில் அம்பானியின் 5 நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், சிபிஐ பதிவு செய்த இரண்டு எஃப்ஐஆர்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த சோதனைகளை நடத்தியது. டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அனில் அம்பானியின் குழுமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 50 நிறுவனங்கள் மற்றும் 25 நபர்களுக்குச் சொந்தமான 35 அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இதனையடுத்து தொழிலதிபர் அனில் அம்பாணி, ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அவர் நேரில் ஆஜராகி விளக்களித்தார். இதனிடையே இந்த பணமோசடி வழக்கில் முதல் கைது நடவடிக்கையாக, பிஸ்வால் டிரேட்லிங்க் பிரைவேட் லிமிடெட் (பிடிபிஎல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி பிஸ்வாலை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
நிதிமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வரும் அதே வேளையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அந்த நிறுவனத்துக்கும், அதன் இயக்குநரான அனில் அம்பானிக்கும் தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவினர், மும்பையில் உள்ள அனில் அம்பானியின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். சிபிஐ சோதனையின் போது அவரது வீட்டில் அனில் அம்பானி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் இருந்ததாக கூறப்படுகிறது.