வெள்ளை மாளிகையில் அதிபர் அலுவலக இயக்குநராக பணியாற்றி வரும் திரு செர்ஜியோ கோர், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் தொடர்பான சிறப்புத் தூதராகவும் பொறுப்பேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது டுரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,“செர்ஜியோ என் சிறந்த நண்பர். பல ஆண்டுகளாக எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். நான் முழுமையாக நம்பக்கூடியவர், என் திட்டங்களை நிறைவேற்றக்கூடியவர். உலகின் மிகவும் முக்கியமான வட்டாரத்தில் நம் நலனுக்காக பணியாற்ற அவரை நியமிப்பது அவசியம்,”
என்று தெரிவித்துள்ளார்.ஆனால், செர்ஜியோ எப்போது இந்திய தூதராக பொறுப்பேற்பார் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. “நான் உறுதி செய்யும் வரை அவர் தற்போதைய பொறுப்பில் தொடர்வார்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா – இந்திய உறவுகள் சமீபத்தில் வர்த்தகப் போரின் காரணமாக சிக்கலில் சிக்கியுள்ளன. வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையில் சிக்கியுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் வேளாண்மை மற்றும் பால்பொருட்கள் துறைக்கு இந்தியா விதித்த தடைகள் இதற்குக் காரணமாகும்.
மேலும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவுக்கு, ஏற்கனவே 25% வரி விதித்திருந்த டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக கூடுதலாக மேலும் 25% வரி விதித்துள்ளார். இந்த 50% வரி வரவிருக்கும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.