சந்திரயான்-3-திட்டத்தின் கீழ் விக்ரம் என்ற தரையிறங்கி கலமும், பிரக்யான் என்ற உலாவியும் வெற்றிகரமாக மென்தரையிறங்கியதை நினைவுகூரும் விதமாக, ஆகஸ்ட் 23-ஆம் தேதியை இந்திய அரசு தேசிய விண்வெளி நாளாக கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தியாவின் தேசிய விண்வெளி நாளான இந்நாளில், 1969-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)புதிதாக சுதந்திரம் பெற்ற தம் நாட்டின் ஒளிமிகு எதிர்காலத்திற்கும் நல்வாழ்வுக்கும் அறிவியலும் தொழில்நுட்பமும் மிக முக்கியமானவை என இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கருதினார். அதன் தொடர்ச்சியாக, அந்த காலத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னணியில் வளர்ந்துவரும் நிலையில் இருந்த அணுசக்தி துறை, விண்வெளித் துறை முதலான எல்லா அறிவியல் வளர்ச்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்.
ஹோமி பாபாவின் தூண்டுதலாலும், நேருவின் ஆதரவாலும், 'விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளித் தொழில்நுட்பத்தின் ஆக்கபூர்வமான பயன்பாடுகள்' இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிக அத்தியாவசியம் எனக் கருதப்பட்டு, இதற்கென சிறப்பு அமைப்பு ஒன்று விக்ரம் சாராபாய் நிறுவிய ஆமதாபாத்திலுள்ள இயற்பியல் ஆராய்ச்சிக் கூடம் (பிஆர்எல்) நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டது. அப்போது இந்த நிறுவனம் அணுசக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதன் தொடர்ச்சியாக 1962-ஆம் ஆண்டில், நேருவின் ஆதரவோடு விக்ரம் சாராபாய் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவை (இன்காஸ்பார்) நிறுவினார்.
இஸ்ரோ நிறுவப்படுவதற்கு முன்னோடியாக இருந்த இக்குழு, இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிக்கு அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இந்த விண்வெளி அமைப்பின் மேலாண்மையில் அதே ஆண்டு, திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள தும்பா பூமத்திய ரேகை ஏவூர்தி ஏவு நிலையம் (டெர்ல்ஸ்) கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1963 நவம்பர் 21-ஆம் தேதி, இந்த ஏவுதளத்திலிருந்து முதல் ஏவூர்தி ஏவப்பட்டது.
இவை மேல்வளிமண்டல ஆய்வுக்குப் பயன்படும் எறிகணை (Sounding) ஏவூர்திகள். முதலில், இவ்வகை எறிகணை ஏவூர்திகள் சோவியத் யூனியன் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 1965-ஆம் ஆண்டுக்குள் சுயமாக எறிகணை ஏவூர்தியை இந்தியா உருவாக்கியது.
இந்த முதற்கட்ட வளர்ச்சிக்குப் பிறகு 1969 நவம்பரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிறுவப்பட்டது. 1972-ஆம் ஆண்டில், அணுசக்தி ஆணைக்குழுவைப் போன்ற ஒரு விண்வெளி ஆணைக்குழுவையும், மத்திய அரசின் கீழ் விண்வெளித் துறையும் நிறுவப்பட்டது. இவற்றின் கீழ் இயங்கும் அமைப்பாக இஸ்ரோ இணைக்கப்பட்டது.
1969-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, ஜூலை 30, 2025 இல் ஏவப்பட்ட நிசார் செயற்கைக்கோள் வரை மொத்தம் 102 ஏவூர்தி ஏவுதல்களை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் விண்கலம், செயற்கைக்கோள் போன்ற பல்வேறு வகை 542 விண்பொதிகளை விண்ணில் ஏவியுள்ளது. சுமார் 34 நாடுகளைச் சேர்ந்த 433 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும். இது சர்வதேச விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் வளர்ந்து வரும் முன்னிலையை வெளிப்படுத்துகிறது.
தற்போது, இந்தியாவின் 24 செயற்கைக்கோள்கள் தாழ் புவிச் சுற்றுப்பாதையிலும் (LEO), நிசார் எனும் இந்திய-அமெரிக்க கூட்டு செயற்கைக்கோள் நிலநேர் சூரிய-ஒத்திசைவு சுற்றுப்பாதையிலும், 30 செயற்கைக்கோள்கள் புவி ஒத்திசைவுச் சுற்றுப்பாதையிலும் உள்ளன. இவை தவிர ஆழ்விண்வெளியில் சந்திரயான்-2 சுற்றுக் கலன், ஆதித்ய-எல்1, மற்றும் சந்திரயான்-3-இன் உந்துதொகுதி ஆகிய மூன்றும் செயல்பட்டு வருகின்றன.
விண்வெளித் தொழில்நுட்பத்தில்
அ) பல்வேறு வகையான ஏவு வாகனங்கள்
ஆ) தகவல் தொடர்பு, தொலையுணர்தல், வானிலை ஆய்வு மற்றும் வழிகாணல் பயன்பாடுகளுக்கான செயற்கைக்கோள்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு
இ) விண்வெளித் தொலைநோக்கிகள், சந்திரன் மற்றும் பிற கிரகங்களுக்கான பயணம்
போன்ற விண்வெளி ஆராய்ச்சி ஆகியவை அடங்கும். இவற்றில் அனைத்திலும் இஸ்ரோ தன் தனித்த முத்திரையைப் பதித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது அக்னிகுல் காஸ்மோஸ், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் போன்ற புதுத் தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கு ஏவூர்தி நுட்பம், ஏவும் வசதி என பல்வேறு உதவிகளை அளித்து இந்திய விண்வெளிப் புதுத் தொழில் நிறுவனங்கள் வளரவும் பங்களிப்பு செய்துள்ளது.
ஏவூர்திகள்உயர் வளிமண்டலம் வரை மட்டுமே செல்லும் திறன் கொண்ட எறிகணை ஏவூர்திகளைத் தான் முதலில் இஸ்ரோ இறக்குமதி செய்து பயன்படுத்தியது. மேல் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் கருவிகளைப் பொதிசுமையாக (payload) ஏந்தி 5 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும் ஒரு பரவளையப் பாதையில் (parabolic trajectory) செல்லும். இதன் மூலம் பல கிலோமீட்டர் உயரம் உள்ள மேல் வளிமண்டலக் காற்று இயக்கத்தை ஆய்வு செய்தனர்.
இந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்று, பின்னர் சுயமாக எறிகணை ஏவூர்திகளைப் படிப்படியாக உருவாக்கத் துவங்கியது. ரோகிணி-75, அல்லது RH-75, எனும் ஏவூர்திதான் இஸ்ரோ தயாரித்த முதல் சுய ஏவூர்தி. ஏவூர்தியின் விட்டம் 75 மிமீ, இதன் காரணமாக '75' என்ற எண். இதைத் தொடர்ந்து மேலும் வலுவுள்ள RH-100, RH-125 ஏவூர்திகள் உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும் திட எரிபொருள் ஏவூர்திகள்.
தொலைஅளவியல் (telemetry), இஸ்ரோவின் திட-இரசாயன ஏவூர்தி வடிவமைப்பு, திறன் மிக்க திட எரிபொருள் உருவாக்கம், ஏவு இயந்திரங்கள், வழிகாணல் பொறிகள், ஏவூர்திக் கட்டுப்பாடு முதலிய துறைகளில் இந்த ஏவூர்தி வடிவமைப்பு மற்றும் ஏவுதல் மூலம் அனுபவம் பெற்றது.
தற்போது இஸ்ரோவிடம் 10 கிலோகிராம் பொதிசுமையை 80 கிமீ உயரத்திற்கு உயர்த்தும் RH-200, 60 கிலோகிராம் பொதிசுமையை 160 கிமீ உயரத்திற்கு உயர்த்தும் RH 300-Mk-II, 100 கிலோகிராம் பொதிசுமையை 470 கிமீ உயரத்திற்கு உயர்த்தும் RH 560 MKII ஆகிய மூன்று வகை உயர் திறன் கொண்ட எறிகணை ஏவூர்திகள் உள்ளன. RH 200-ஐ தும்பாவிலிருந்து ஏவ முடியும், மற்றவை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து மட்டுமே ஏவப்படுகின்றன.
ஏவூர்திகளைத் தயாரிப்பது மற்றும் ஏவுவது குறித்து நன்கு அறிந்த பிறகு, இஸ்ரோ பொதிசுமையைச் சுற்றுப்பாதையில் வைக்கும் திறன் கொண்ட ஏவூர்தித் தயாரிப்பில் ஈடுபட்டது. 1980-களின் தொடக்கத்தில், 40 கிலோகிராம் பொதிசுமையைத் தாழ் புவிச் சுற்றுப்பாதையில் ஏவக்கூடிய செயற்கைக்கோள் ஏவு வாகனம்-3 (SLV-3) உருவாக்கப்பட்டது. இது நான்கு நிலை கொண்ட திட எரிபொருள் ஏவூர்தி ஆகும்.
இதைத் தொடர்ந்து 1980-களின் பிற்பகுதியில் மேம்பட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனம் (ASLV) தயாரிக்கப்பட்டது. ஐந்து-நிலை கொண்ட ASLV, திட எரிபொருள் ஏவூர்தி. இது 150 கிலோகிராம் பொதிசுமையைத் தாழ் புவிச் சுற்றுப்பாதையில் ஏவும் திறன் கொண்டது. இந்த இரண்டு ஏவூர்திகளும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டன.
இந்த முதல் இரண்டு தலைமுறை ஏவூர்திகளின் அனுபவத்திலிருந்து மூன்றாம் தலைமுறை பிஎஸ்எல்வி (PSLV) எனும் துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் உருவாக்கப்பட்டது. இதில்தான் முதன் முதலாக திரவ எரிபொருளைப் பயன்படுத்திச் சோதனை செய்தனர். இந்த ஏவூர்தியில் முதல் மற்றும் மூன்றாம் நிலைகள் திட எரிபொருளைக் கொண்டிருக்கும், இரண்டாம் மற்றும் நான்காம் நிலைகள் திரவ எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. இந்த நான்கு-நிலை ஏவூர்தி, 1,750 கிலோகிராம் பொதிசுமையைத் தாழ் புவிச் சுற்றுப்பாதையில் வைக்கக்கூடியது. இது 1400 கிலோகிராம் பொதிசுமையை புவிநிலைப் பரிமாற்றச் சுற்றுப்பாதையில் (GTO) ஏவக்கூடியது, அங்கிருந்து அது புவி ஒத்திசைவு அல்லது புவிநிலைச் சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லலாம்.
செப்டம்பர் 20, 1993-ஆம் தேதி முதல் ஏவுதலிலிருந்து, ஆகஸ்ட் 2025 வரை 61 முறை இந்த பிஎஸ்எல்வி ஏவூர்தியை ஏவியுள்ளனர். இதில் ஒன்று பகுதி வெற்றி; இரண்டு தோல்வி; மற்ற 58ம் வெற்றி. எனவே உலகளவில் நம்பகத்தன்மை கொண்ட ஏவூர்தி எனக் கருதப்படுகிறது.
கனரக தகவல் தொடர்பு செயற்கைக்கோள், நிலவு போன்ற வேற்றுக் கோள்களுக்குச் செல்லும் விண்கலம் போன்ற கூடுதல் எடைகொண்ட பொதிசுமைகளை ஏந்திச் செல்ல, நான்காம் தலைமுறை புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவூர்தி (GSLV)-ஐ இஸ்ரோ வடிவமைத்தது. இந்த மூன்று-நிலை ஏவூர்தியில் முதல் நிலையில் திட எரிபொருளையும், இரண்டாம் நிலையில் திரவ எரிபொருளையும், மூன்றாம் நிலையில் மேம்பட்ட கிரையோஜெனிக் எரிபொருளையும் (cryogenic fuel) பயன்படுத்துகின்றனர்.
முதல் இரண்டு நிலைகள் பொதிசுமையை விண்வெளிக்கு ஏவுகின்றன. கிரையோஜெனிக் நிலை, செயற்கைக்கோளை புவி-பரிமாற்றச் சுற்றுப்பாதைக்கு (geo-transfer orbit) கொண்டு செல்வதில் உதவுகிறது. அங்கிருந்து விண்கலத்தின் உந்து ராக்கெட் பயன்படுத்திப் புவி ஒத்திசைவுச் சுற்றுப்பாதைக்கு (geosynchronous orbit) எடுத்துச் செல்ல முடியும். எனவே இஸ்ரோவின் பாகுபலி எனப்படும் இந்த ஏவூர்தி மூலம் தாழ் புவிச் சுற்றுப்பாதையில் 6,000 கிலோகிராம் பொதிசுமையைக் கொண்டு செல்ல முடியும்; 2,500 கிலோகிராம் GTO நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.
துவக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பமான கிரையோஜெனிக் இயந்திரங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ரஷ்ய இயந்திரங்களைப் பயன்படுத்தி ஐந்து ஏவுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இரண்டு வெற்றி; இரண்டு பகுதி வெற்றி; ஒன்று தோல்வியில் முடிந்தது.
இந்தியாவிற்கு இந்த அதிநவீன ராக்கெட் தொழில்நுட்ப இயந்திரங்களை ரஷ்யா விற்கக்கூடாது என்று அமெரிக்கா அழுத்தம் அளித்தது. இது இஸ்ரோவை நெருக்கடியில் தள்ளியது. எனினும் இஸ்ரோவுக்கு இது மறைமுகமான ஆசீர்வாதமாக மாறியது. தளர்ச்சியடையாமல் சுயமாகக் கிரையோஜெனிக் ராக்கெட்டுகளைத் தயாரிக்க இஸ்ரோ ஆய்வைத் துவங்கியது. ஜனவரி 2014-இல் இந்தியாவின் சுய தயாரிப்பு கிரையோஜெனிக் கொண்ட GSLV Mk II ஏவூர்தி வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதுவரை 12 முறை ஏவப்பட்டது; இதில் 10 வெற்றி.
GSLV வகை ஏவூர்தியின் பொதிசுமைத் திறனை அதிகரிக்க, இஸ்ரோ ஒரு உயர்-உந்து கிரையோஜெனிக் மேல் நிலை (C25)-ஐ வடிவமைத்து GSLVmk3-ஐ உருவாக்கியது. GSLVmk3 என்பதைத் தற்போது LVM3 என்கிறார்கள். இந்த ஏவூர்தி முதல் நிலையில் இரண்டு திட ஸ்ட்ராப்-ஆன் மோட்டார்கள் (strap-on motors), இரண்டாம் நிலையில் திரவ எரிபொருள் நிலை, மூன்றாம் நிலையில் உயர்-உந்து க்ரியோஜெனிக் மேல் நிலை (C25) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 4000 கிலோகிராம் விண்கலத்தை GTO-விற்கும் (புவி ஒத்திசைவு பரிமாற்றச் சுற்றுப்பாதை) 8000 கிலோகிராம் பொதிசுமை தாழ் புவிச் சுற்றுப்பாதைக்கும் ஏவும் திறன் கொண்டது. மேலும் நிலவு நோக்கிச் செல்லும் பாதையில் 3000 கிலோகிராம் விண்கலத்தை ஏவும் திறனும் கொண்டது. இந்த ஏவூர்தி கொண்டு சந்திரயான் 2 மற்றும் 3 உட்பட இதுவரை ஏவப்பட்ட ஏழும் வெற்றி.
மனிதன்-பயணம் செய்யும் LVM3 (HLVM3) என்பது வேறுவகை LVM3 ஆகும். ககன்யான் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுவரும் இதில் ஒரு பயணக்குழுத் தப்பிப்பு அமைப்பு (Crew Escape System – CES) இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விண்வெளி வணிகம் ஒரு பெரும் மாற்றத்தைக் கண்டது. கடந்த காலத்தில் 10 முதல் 20 டன் எடை கொண்ட ஒரு செயற்கைக்கோள் 20 முதல் 30 ஆண்டுகள் ஆயுட்காலத்துடன் புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் தேவை இருந்தது; எனவே அதிக ஆற்றல் கொண்ட பெரிய ஏவூர்திகள் தேவைப்பட்டன. பல ஆண்டுகாலம் விண்வெளியில் செயற்கைக்கோள் செயல்படும்போது பூமியின் தரையில் பயன்படுத்தப்படும் மின்னணுக் கருவி மேம்படும் நேரத்தில் விண்ணில் உள்ள மின்னணு தொழில்நுட்பம் காலாவதியாகிவிடும். இதைத் தவிர்க்க தற்போது புவிச் சுற்றுப்பாதையைப் பயன்படுத்தி ஒருசில ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட குறைந்த-செலவு பிடிக்கும், சிறிய நுண்-செயற்கைக்கோள்களின் (microsatellites) தொடர்களை (train) பயன்படுத்தும் போக்கு வளர்ந்து வருகிறது. சில ஆண்டுகளில் விண்கலத்தில் உள்ள மின்னணுக் கருவிகள் காலாவதியானதும் அந்த விண்கலத்தைப் புறந்தள்ளி, அதற்குப் பதிலாகப் புத்தாக்கம் பெற்ற மின்னணுக் கருவிகளோடு செயற்கைக்கோளை அனுப்பிவிடலாம். எனவே தற்போது விண்வெளி வணிகத்தில் சிறிய, நுண் மற்றும் நானோ-செயற்கைக்கோள்களுக்கு மவுசு ஏற்றப்பட்டுள்ளது.
மினி, நுண் மற்றும் நானோ-செயற்கைக்கோள்களுக்கான சந்தை விரிவடைவதைக் கவனத்தில் கொண்டு இஸ்ரோ உடனடியாகச் சிறு ரகச் செயற்கைக்கோள் ஏவூர்தி (SSLV) என அழைக்கப்படும் மூன்று-நிலை, முழுதும் திட-எரிபொருள் கொண்ட சிறு ரக ஏவூர்தியை வடிவமைத்துள்ளது. SLV3-இன் நிபுணத்துவம் இந்த வகை ஏவூர்தியை வடிவமைக்க உதவியது. இதன் முதல் ஏவுதல் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இரண்டு ஏவுதல்கள் வெற்றி. இந்த மூன்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
SSLV ஏவுதல்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இஸ்ரோ குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது விண்வெளித் தளத்தை (spaceport) நிறுவிவருகிறது.
இந்தியாவின் தகவல் தொடர்பு அமைப்பை வலுசெய்யும் தகவல்தொடர்புச் செயற்கைக்கோள்கள்தான் இஸ்ரோவின் முதன்மை முன்னுரிமையாக இருந்துவருகிறது. 1981-ஆம் ஆண்டில் ஒற்றை டிரான்ஸ்பாண்டர் கொண்ட ஆப்பிள் (APPLE) செயற்கைக்கோள் ஏவப்பட்டது. தகவல் தொடர்பு, தொலைக்காட்சி, வானிலை ஆய்வு மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட புவிநிலைச் செயற்கைக்கோள் அமைப்பான இந்திய தேசிய செயற்கைக்கோள் திட்டத்தை (INSAT) இஸ்ரோ உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஏவப்பட்ட ஜிசாட் 24 (GSAT 24) மூன்று அதிர்வெண் பட்டைகளில் செயல்படும் 48 டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டுள்ளது. வலுவான தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்களை வடிவமைத்து உருவாக்கி ஏவும் திறனை இஸ்ரோ பெற்றுவருகிறது.
ஏப்ரல் 10, 1982-ஆம் தேதி ஏவப்பட்ட முதல் முயற்சியான INSAT-1A தோல்வியடைந்தது. அமெரிக்காவின் விண்வெளி ஓடம் கொண்டு ஆகஸ்ட் 30, 1983-ஆம் தேதி நிலைநிறுத்தப்பட்ட INSAT-1B தான் வெற்றிகரமாக செயல்பட்ட முதல் இந்திய தகவல் தொடர்புச் செயற்கைக்கோள். தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, சமூகப் பயன்பாடுகள், வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் எச்சரிக்கை மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு ஆகியவற்றிற்கு INSAT செயற்கைக்கோள்கள் பெரிதும் உதவின.
டிஜிட்டல் இசை, தரவு மற்றும் வீடியோ ஒளிபரப்புக்காக அடுக்கட்ட தொடர் தகவல் தொடர்பு புவி ஒத்திசைவுச் செயற்கைக்கோள்களான ஜிசாட் (GSAT) வகை செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. மூன்றாம் தலைமுறை சிஎம்எஸ் (CMS) தொடர் செயற்கைக்கோள்கள் தற்போது வடிவமைத்து ஏவிவருகிறது. சிஎம்எஸ் (CMS) தொடரின் முதல் செயற்கைக்கோள் CMS-01 டிசம்பர் 2020-இல் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 200க்கும் அதிகமான விண்வெளி டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்ட உலகின் முக்கிய விண்வெளித் தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் வலைப்பின்னல் கொண்ட அமைப்பாக இஸ்ரோ உருவாகியுள்ளது.
தகவல் தொடர்பு போலவே, வானிலை கண்காணிப்பு போன்ற தொலையுணர்தல் மற்றும் பூமி ஆய்வு ஆகியவையும் இஸ்ரோவின் கவனத்தைப் பெரும் துறைகள் ஆகும். ஜூன் 7, 1979-ஆம் தேதி பாஸ்கரா-1 புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் ஏவப்பட்டதிலிருந்து, இஸ்ரோ 46 தொலையுணர்தல் மற்றும் பூமி ஆய்வுச் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.
அவை விவசாயம், நீர் வளங்கள், நகர்ப்புறத் திட்டமிடல், கிராமப்புற மேம்பாடு, கனிம வள ஆய்வு, சூழல், வனவியல், கடல் வளங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் ஆய்வு மற்றும் திட்டமிடலுக்கு உதவியுள்ளன. பல்நோக்கு இந்திய தொலையுணர்தல் (IRS) செயற்கைக்கோள் தொடர்கள், கார்டோசாட் (CARTOSAT), ரிசாட் (RISAT), ஓஷன்சாட் (OCEANSAT), ரிசோர்சஸ் (RESOURCES) பூமிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள்கள் (EOS) போன்ற இரண்டாம் தலைமுறை மேம்பட்ட செயற்கைக்கோள் தொடர்கள் ஆகும்.
அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சமீபத்தில் ஏவப்பட்ட நிசார் புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் இந்த மைல்கற்களில் மிகவும் முக்கியமானது.
அடுத்தடுத்த புதுமைகள்அமெரிக்காவின் ஜிபிஎஸ் போல இந்தியாவுக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்குடன் IRNSS எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அணுக்கடிகாரங்களின் செயல்பாடு பழுதானதால் இந்தத் திட்டம் சரிவர முன்னேற்றம் காண முடியவில்லை. இதையடுத்து சுயமாக அணுக் கடிகாரம் தயாரித்து இதில் முன்னேற்றம் காண புது முயற்சியைச் சமீபத்தில் இஸ்ரோ முன்னெடுத்துள்ளது.
தனது முதல் விண்வெளி ஆய்வகங்களில் ஒன்றான அஸ்ட்ரோசாட் (AstroSat)-ஐ இஸ்ரோ ஏவியது. 2015-ஆம் ஆண்டில் தாழ் புவிச் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட இந்த விண்வெளித் தொலைநோக்கி இன்னும் செயல்பாட்டில் உள்ளது. செவ்வாய்ச் சுற்றுக் கலன் திட்டம் இஸ்ரோவின் முதல் கிரகங்களுக்கு இடையேயான (interplanetary) விண்வெளித் திட்டம் ஆகும். முதல் சந்திரச் சுற்றுக் கலன் திட்டம் சந்திரயான்-1, நிலவில் தரையிறங்கி ஆய்வுசெய்ய சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3, சூரியனை ஆய்வு செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆதித்ய-எல்1 ஆகியவை இஸ்ரோவின் விண்வெளிப் பணிகளில் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும்.
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயண திட்டமான 'ககன்யான்' திட்டத்திற்கான மனித-தரம் கொண்ட ஏவூர்தியின் முதல் மனிதரற்ற சோதனைப் பயணம் 2025-இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சுக்கிரயான் (Shukrayaan) திட்டம் வெள்ளிக் கிரகத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செவ்வாயை ஆய்வு செய்வதற்கான MOM-2, சந்திரனிலிருந்து ஒரு சிறிய அளவு மண் மற்றும் பாறைகளைப் பூமிக்குக் கொண்டு வரும் மாதிரி திரும்பப் பெறும் பணிக்கான லட்சியத் திட்டத்துடன் கூடிய சந்திரயான்-4, மற்றும் ஜப்பானுடனான Lunar Polar Explorer திட்டம் ஆகியவை வளர்த்தெடுக்கப்பட்டு வரும் சில லட்சியமான எதிர்காலத் திட்டங்களாகும். மூன்று முதல் நான்கு விண்வெளி வீரர்கள் 10-20 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு அனுமதிக்கும் ஒரு இந்திய விண்வெளி நிலையத்தை இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
இந்தச் சூழலில் கடந்த ஆண்டு இரண்டு முக்கிய முனைப்புகளை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது. முதலில், இரண்டு விண்கலங்கள் விண்ணில் இணைந்து பிரியும் விண் இணைப்புச் சோதனை. இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி நிலையம் உருவாக்குவது முதல் சர்வதேச விண்வெளி மையத்தை இந்திய விண்கலம் அடைந்து அதில் இணையும் படியான பல்வேறு விண்வெளிச் சாதனைகளுக்கு வழிவகுக்கும்.
இரண்டாவதாக, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு இந்தியக் குடிமகன் ஒருவர் சென்று வந்துள்ளார்; சர்வதேச விண்வெளி மையத்தில் இரண்டு வாரங்கள் தங்கி விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்ட சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் இஸ்ரோவின் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு