சென்னை, கண்ணகி நகரில் நேற்று இரவு பெய்த மழையால் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணகி நகரை சேர்ந்த ஒப்பந்த பணியாளரான வரலட்சுமி இன்று அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மழைநீரில் கால் வைத்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் நீரில் விழுந்தார். இதை கண்ட அப்பகுதியினர் அவரை காப்பாற்ற முயன்றனர், ஆனால் முடியவில்லை. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், மின்சாரத்தை துண்டித்து வரலட்சுமியின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவத்திற்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், கண்ணகி நகர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran