தூய்மை பணியாளர் உயிரிழப்புக்கு திமுக அரசுதான் முழு பொறுப்பு - டிடிவி தினகரன் கண்டனம்..!!
Top Tamil News August 23, 2025 09:48 PM

அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் சென்னை கண்ணகி நகர் அருகே மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர்  உயிரிழந்ததற்கு திமுக அரசே முழு பொறுப்பு என அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 

கண்ணகி நகர் மட்டுமல்ல எழில்நகர், பெரும்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் சேதமடைந்திருக்கும் மின்சாரக் கம்பிகள் குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே தூய்மைப் பணியாளர் உயிரிழக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பு என்ற கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி போராட்டத்தை கலைத்த திமுக அரசு, தற்போது தன் நிர்வாக அலட்சியத்தால் பறிபோன இந்த உயிருக்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கிறது?

மேலும், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மட்டுமே தீர்வாகாது என்பதை உணர்ந்து, மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் சேதமடைந்து அபாயகரமான நிலையில் இருக்கும் மின் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.