மேற்கு திசைக் காற்றின் வேக மாற்றங்களால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த எச்சரிக்கைக்கு இணங்க, நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதனை முன்னிட்டு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பள்ளி–கல்லூரி மாணவர்கள் முதல், அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் வரை அச்சத்துடன் நாளை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 25ம் தேதி உருவாகக்கூடிய இந்த தாழ்வு பகுதி, அடுத்த கட்டமாக ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடையிடையே மழை பெய்யும் நிலை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லாமல் இருக்கவும், மின்சார வசதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.