Asia Cup Controversies: கௌதம் கம்பீர் vs கம்ரன் அக்மல்.. ஆசியக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத டாப் 5 சர்ச்சைகள்!
TV9 Tamil News August 23, 2025 02:48 PM

2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. 17வது முறையாக நடைபெறும் இந்த ஆசியக் கோப்பை, 2025ம் ஆண்டில் டி20 வடிவத்தில் நடத்தப்பட இருக்கிறது. கடந்த 1984ம் ஆண்டு முதல் விளையாடப்படும் ஆசியக் கோப்பையில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதாவது கடந்த 41 ஆண்டுகளில் ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி (Indian Cricket Team) 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த போட்டியின் வரலாற்றில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்களும் நடந்துள்ளன. அதன்படி, ஆசிய கோப்பையின் 5 மிகப்பெரிய சர்ச்சைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

1986 – விளையாட மறுத்த இந்தியா:

முதல் ஆசியக் கோப்பை முடிந்து, 2வது ஆசிய கோப்பை போட்டி 1986ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது. அன்றைய காலக்கட்டத்தில் இலங்கையில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையே உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அரசு தனது இந்திய அணியை இலங்கைக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இதனால், 1986ல் நடந்த ஆசியக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்கவில்லை.

ALSO READ: அதிகபட்சம் மகாராஷ்டிரா! தமிழக வீரருக்கு வாய்ப்பா..? இந்திய அணியில் இடம் பிடித்த மாநில வாரியான வீரர்கள் விவரம்!

1990 – புறக்கணித்த பாகிஸ்தான்:

1989 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அரசியல் காரணத்திற்காக மோசமடைய தொடங்கின. இதையடுத்து, 1990ம் ஆண்டு இந்தியா ஆசிய கோப்பையை நடத்தியது. ஆனால் அரசியல் உறவுகள் காரணமாக, பாகிஸ்தான் அணி 1990ம் ஆண்டு ஆசிய கோப்பையை இந்தியாவுக்கு சென்று விளையாட மறுத்துவிட்டது.

2010 – கௌதம் கம்பீர் vs கம்ரன் அக்மல்:

2010 ஆசிய கோப்பை இலங்கை மண்ணில் நடைபெற்றது. அந்த போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்து கொண்டிருந்தது. போட்டியின் போது, ​​இந்திய பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் விக்கெட் கீப்பராக கம்ரான் அக்மல் நின்றார். போட்டியில், ஷாஹித் அப்ரிடியின் பந்து கம்பீரின் பேட்டை ஒவ்வொரு முறை கடந்தபோது, ​​அக்மல் மீண்டும் மீண்டும் மேல்முறையீடு செய்தார். இதனால் கம்பீர் கோபமடைந்தார். இருவரும் மைதானத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது, நடுவர்களால் சமாதானப்படுத்தப்பட்டது.

2010- ஹர்பஜன் சிங் vs சோயிப் அக்தர்:

2010 ஆசிய கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் டெத் ஓவர்களில் ஷோயப் அக்தர் ஹர்பஜன் சிங்கிற்கு பவுன்சர்களை வீசி தொல்லை கொடுத்தார். அதன் பிறகு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடைசி ஓவரில், ஹர்பஜன் ஒரு சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். ஹர்பஜன் மிகவும் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ​​அக்தர் 2 விரல்களை காட்டி அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

ALSO READ: ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா? மத்திய அமைச்சகம் விளக்கம்!

2016 – தோனியின் தலை:

2016 Asia Cup final #Cricket

Yet another tournament we won without dropping a single game. 5/5 wins and 6th Asia cup title pic.twitter.com/ZnlJqCxosI

— Cow Corner (@CowCorner183)


2016 ஆசிய கோப்பை இறுதிப் போட்டி இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால் அந்த போட்டிக்கு முன்பு, தஸ்கின் அகமது எம்.எஸ். தோனியின் தலையை கையில் ஏந்தியபடி இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி மழைக்காரணமாக 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி வெறும் 13.5 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் அதிகபட்சமாக ஷிகர் தவான் 44 பந்துகளில் 60 ரன்கள், கோலி 28 பந்துகளில் 41 ரன்கள், எம்.எஸ்.தோனி 6 பந்துகளில் 20 ரன்களை குவித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.