சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விநாயகர் சிலைகள் நிறுவும் இடத்தின் நில உரிமையாளர்கள், நெடுஞ்சாலை துறை அல்லது அரசு துறையிடமிருந்து அனுமதி பெறுவது கட்டாயம்.
மேலும் தீயணைப்பு, மின்வாரியம் ஆகிய துறைகளில் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான கட்டுப்பாடுகள் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். நிறுவப்படும் சிலையின் உயரம் அடித்தளத்தில் இருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் நிறுவப்படக்கூடாது. இரண்டு தன்னார்வலர்கள் சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
விநாயகர் சிலைகளை காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள், கரைக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என வழிகாட்டுதல்களில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.