"அவங்க 2 பேரை சேக்காம கம்பீர் பெரிய தப்பு பண்ணிட்டாரு"– கம்பீரை கடுமையாக சாடிய மனோஜ் திவாரி
Seithipunal Tamil August 23, 2025 05:48 PM

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் பிசிசிஐயின் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 15 வீரர்கள் கொண்ட இந்த அணி இன்னும் சில நாட்களில் துபாய் செல்லவுள்ளது.

ஆனால், இந்த அணித் தேர்வைச் சுற்றி பெரும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, சிலர் வாய்ப்பு பெற்ற விதமும், சிலர் புறக்கணிக்கப்பட்ட விதமும் முன்னாள் வீரர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 மனோஜ் திவாரியின் கடும் விமர்சனம்
இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, அணித் தேர்வை கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக, பயிற்சியாளர் கௌதம் கம்பீரை குறிவைத்து அவர் கூறியதாவது:

“இந்த ஆசிய கோப்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் நிச்சயமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.கம்பீரே முன்னர் பேட்டிகளில், ‘ஜெய்ஸ்வால் எந்த சூழ்நிலையிலும் டி20 போட்டிகளில் தன்னை பொருத்திக் கொள்ளக் கூடியவர்’ என்று புகழ்ந்து பேசியிருந்தார். ஆனால் இப்போது அவர் அணியில் இடம்பெறவில்லை என்பது புரியாத முடிவு.”

அவர் மேலும் கூறியதாவது:“ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றார். அதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையையும் வென்றுத்தந்தார்.உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவர் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய தவறு.

ஒரு முன்னாள் வீரராக கம்பீரின் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் வேறு. ஆனால் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும்போது அவரது தனிப்பட்ட எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு அணித் தேர்வு செய்யப்பட்டதாகவே தெரிகிறது” என்று மனோஜ் திவாரி கடுமையாக குற்றம்சாட்டினார்.

 இதன் மூலம், ஆசிய கோப்பை 2025 அணியைச் சுற்றிய சர்ச்சை மேலும் சூடுபிடித்துள்ளது. முன்னாள் வீரர்கள் கூட வெளிப்படையாக விமர்சனை செய்யும் நிலையில், இந்த அணித் தேர்வின் பின்னணி குறித்து ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.