இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுப்மன் கில் உடல்நலக்குறைவு காரணமாக, வரும் துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆசிய கோப்பைக்கு தயாராகும் நிலையில் அவருக்கு ஏற்பட்ட இந்த உடல்நலக்குறைவு, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சுப்மன் கில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ-இன் மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்ததாகவும், தற்போது அவர் சண்டிகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது ஆசிய கோப்பை தொடங்குவதற்குள் அவர் முழுமையாக குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில் வட மண்டல அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவரது உடல்நலக்குறைவு காரணமாக, ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கும் துலீப் டிராபி தொடரின் முழு போட்டிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
இந்த சூழலை ஏற்கனவே கணித்திருந்த வட மண்டல தேர்வு குழு, சுப்மன் கில்-க்கு பதிலாக ஷுபம் ரோகிலா என்பவரை மாற்று வீரராகத் தேர்வு செய்தது. சுப்மன் கில் இல்லாததால், துணை கேப்டனாக இருந்த அங்கித் குமார் இப்போது வட மண்டல அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார்.
மற்ற இந்திய வீரர்களும் பங்கேற்க மாட்டார்களா?
சுப்மன் கில் தவிர, ஆசிய கோப்பையில் பங்கேற்கும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரும் துலீப் டிராபியின் தொடக்க போட்டிகளில் மட்டுமே விளையாடிவிட்டு, ஆசிய கோப்பைக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, துலீப் டிராபியில் இந்தியாவின் முன்னணி வீரர்களை பங்கேற்க செய்யாதது குறித்து பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் பலரை அந்தந்த மண்டல அணிகள் தேர்வு செய்யாதது குறித்து, பிசிசிஐ பொது மேலாளர் குரூவில்லா, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உறுதிப்படுத்த, தற்போது களத்தில் இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் துலீப் டிராபியில் இடம்பெற வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னணி வீரர்களான கே.எல். ராகுல், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் சுதர்சன் உள்ளிட்ட பலரும் துலீப் டிராபியில் இடம்பெறாதது பிசிசிஐ-ஐ கவலையடைய செய்துள்ளது
Author: Bala Siva