இளவேனில் வாலறிவனின் சாதனைகள் தமிழகத்தையும், இந்தியாவையும் பெருமைப்படுத்துகின்றன - அண்ணாமலை வாழ்த்து..!
Newstm Tamil August 23, 2025 11:48 PM

ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “2025 ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரின் அற்புதமான சாதனைகள் தமிழகத்தையும், இந்தியாவையும் பெருமைப்படுத்துகின்றன. இளவேனில் சாதனைகள், எதிர்கால சாம்பியன்களை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை இளவேனில் 253.6 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

குஜராத்தில் வசித்து வரும் 26 வயதான இளவேனில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். உலகக் கோப்பை போட்டியில் பல தங்கப்பதக்கங்களை வென்று இருக்கும் இளவேனில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் கைப்பற்றிய 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.