2025 ஆசியக் கோப்பை தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதனை முன்னிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மோசின் நக்வி சமீபத்தில் ஒரு அதிரடி பேட்டியை கொடுத்துள்ளார்.
அதில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இனிமேல் நாங்கள் யாரையும் நாடி கெஞ்சமாட்டோம். கடந்த காலம் போல இல்லை. இனி எதுவானாலும், அது சமத்துவத்தின் அடிப்படையில் தான் நடக்கும். இந்தியாவுக்கு நாங்கள் சமமான இடத்தில் தான் இருப்போம்” என்று தெளிவாக தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு தொடர்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் நடைபெறவில்லை. அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகள் காரணமாக, இரு அணிகளும் தற்போது ஐசிசி மற்றும் ஏசியா கிரிக்கெட் கவுன்சில் போட்டிகளில் மட்டுமே மோதிவருகின்றன.
இதனிடையே, 2025 ஆசியக் கோப்பை, சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டிகளில் இந்தியா மீண்டும் பாகிஸ்தானை சந்திக்க வாய்ப்பு இருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் பாகிஸ்தான் தலைவர் நக்வியின் இந்த வகை பேச்சு, கிரிக்கெட் உலகத்தில் புதிய சர்ச்சையையும் திருப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.