எம்ஆர்ஐ பரிசோதனைக்கு மாற்று கருவி: புதிய கையடக்க சாதனத்தை உருவாக்கியுள்ள ஐ.சி.எம்.ஆர்: குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் பயன்படுத்தலாம்..!
Seithipunal Tamil August 25, 2025 08:48 AM

மூளையை ஸ்கேன் செய்யும் வகையில் கையடக்க சாதனத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உருவாக்கி சாதனை படைத்துள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய இயலாத ஏழ்மையான மக்களுக்கும், கிராம புறங்களில் உள்ளவர்களுக்கும் இது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ சோதனை அதிக கட்டணம் செலுத்து எடுக்க வேண்டும் என்பதால் பெரும்பாலான மக்களுக்கு அரிதான ஒன்றாக இருக்கிறது. அத்துடன், அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வசதி இருக்காது. இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில், மூளையை ஸ்கேன் செய்ய CEREBO என்ற கையடக்க கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உருவாக்கியுள்ளது.

இந்த கருவி சி.டி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேனர்கள் போன்ற மேம்பட்ட நோயறிதல் கருவிகள் அணுக முடியாத இடங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்றும், மூளைக் காயத்தைக் கண்டறிய உதவியாக இருக்கும் என்றும் குறிப்பேற்றப்படுகிறது. அத்துடன் இது செலவை குறைக்கும் என்றும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கிராமப்புறங்களில், மூளை காயங்களால் ஏற்படும் இறப்பை குறைக்கும் வகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த கையடக்க ஸ்கேன் கருவியை உருவாக்கியுள்ளது. பல்வேறு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு, CEREBO என்று பெயரிடப்பட்ட இந்த கையடக்க இயந்திரம், கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற மேம்பட்ட நோயறிதல் கருவிகளை விட மிக உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சாதனத்தை பயன்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இப்போது மாநில அரசுகளின் ஆதரவை நாடுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த கையடக்க சாதனம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் உபயோகப்படும் என்றும், வெறும் 30 நிமிட பயிற்சியுடன், மருத்துவ ஊழியர்கள் இந்த சாதனத்தை இயக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டாக்டர் ராஜிவ் பாஹ்ல் கூறியுள்ளதாவது: ஆம்புலன்ஸ்கள், கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் பேரிடர் மீட்பு பிரிவுகளில் பயன்படுத்த கூடிய வகையில், வடிவமைக்கப்பட்ட இந்த கருவி நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், பெங்களூருவின் மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் மற்றும் பயோஸ்கேன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரத்தை சோதனை செய்யும் பணி நடந்து வருகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே இந்தியாவில் தான் தலையில் காயங்கள் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்கின்றன. இதனால் ஆண்டுதோறும் 1,00,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தலையில் கடுமையான காயங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த சாதனம் உதவிகரமாக இருக்கும் என்றும் மக்கள் மத்தியில் இந்த கையடக்க ஸ்கேன் கருவி மிகுந்த வரவேற்பை பெரும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் உறுதியாகள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.