திருச்சி மாவட்டம் துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்க முயன்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரப் பொதுக்கூட்டம் நடத்த இருந்த நிலையில் அங்கு அதிமுகவினர் பெருமளவில் சாலையோரம் காத்திருந்தனர். அப்போது, அவ்வழியே ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கியவரை மீட்க ஆம்புலன்ஸ் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த சில அதிமுகவினர்ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், ஆம்புலன்ஸுை தடுத்து நிறுத்தியதோடு, கதவை திறந்து ஓட்டுநரைஅதிமுகவினர் தாக்க பாய்ந்துள்ளனர். அத்துடன், ஆம்புலன்ஸ் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்ததன் மூலம் விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட்டுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் அதிமுகவினர் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 18-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள எம்ஜிஆர் சிலை அருகே இரவு 10.18 மணிக்கு பேச தொடங்கியபோது அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்தது.
உடனே ஆம்புலன்சை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி, அதில் நோயாளிகள் உள்ளார்களா..? என பார்க்கும்படி கட்சியினரிடம் கூறினார். மேலும், நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை திட்டமிட்டே அனுப்புகிறீர்கள் எனக்கூறியதுடன், அடுத்த முறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்கு இடையூறாக வந்தால், ஆம்புலன்சை ஓட்டி செல்பவர் அதில் பேஷண்டாக செல்வார் என ஓட்நரை நேரடியாகவே இபிஎஸ் மிரட்டியிருந்தார்.
அந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்பத்தியது. அது குறித்து போலீஸ் விசாரணை செய்ததில், அந்த ஆம்புலன்ஸ் பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக சென்றது என கூறப்பட்டது.
இதுகுறித்து மறுநாள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விளக்கம் அளித்திருந்தார். இதற்கிடையே ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேந்தர் அணைக்கட்டு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அடையாளம் தெரியாத 05 நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.