சர்வதேச விமான பயண இருக்கை எண்ணிக்கையின்படி, தென்னிந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களின் தரவுகளை ஒப்பிடும்போது, சென்னை தனது பாரம்பரியமான இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் சவால்களை எதிர்கொள்கிறது.
செப்டம்பர் மாதத்திற்கான தோராயமான தினசரி சர்வதேச இருக்கைகளின் எண்ணிக்கை இதோ:
பெங்களூரு: 11,500
சென்னை: 10,500
ஹைதராபாத்: 9,200
கொச்சி: 8,850
இந்த தரவுகளின்படி, சர்வதேச விமான பயண எண்ணிக்கையில் இந்தியாவின் நான்காவது பரபரப்பான விமான நிலையமாக ஹைதராபாத் விரைவில் தென்னிந்திய அளவில் சென்னையை முந்தி, சென்னையை பின்னுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்காலக் கணிப்பு மற்றும் பின்னடைவுக்கான காரணங்கள்
ஒரு காலத்தில், இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாக சென்னை சவாலின்றி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், இப்போது ஹைதராபாத் சென்னையை முந்தி செல்லும் நிலையில் உள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக, ஹைதராபாத் விமான நிலையம் ஒரு தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது மற்றும் ஒரு பசுமைவெளி விமான நிலையமாக (Greenfield Airport) செயல்படுவது போன்றவை கருதப்படுகின்றன.
தனியார்மயமாக்கலின் நன்மை: ஹைதராபாத் விமான நிலையத்தின் தனியார் நிர்வாகம், நவீன உள்கட்டமைப்பு, பயணிகளுக்கான வசதிகள் மற்றும் விரைவான செயல்பாட்டு முடிவுகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. இது, விமான போக்குவரத்து நிறுவனங்களை ஈர்ப்பதுடன், பயணிகளின் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது.
பசுமைவெளி விமான நிலையத்தின் பலன்: ஹைதராபாத் விமான நிலையம், புதியதாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதால், எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான இடவசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இதனால், அதிகரித்து வரும் விமான போக்குவரத்து தேவையை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.
சென்னையின் விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் இட நெருக்கடி உள்ளிட்ட பல சவால்கள் உள்ளன. புதிய வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவது என்பது இங்கு சிக்கலானதாக உள்ளது. இதற்காக தான் பரந்தூர் விமான நிலையம் திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பகுதி மக்கள் போராட்டம், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அதன் பணி தடைபட்டுள்ளது. இதன் விளைவாக, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற புதிய விமான நிலையங்கள் நவீன வசதிகளுடன் வளர்ந்து, சர்வதேச பயணிகளை தங்கள் பக்கம் ஈர்க்கின்றன.
எதிர்காலப் பார்வை
இந்த நிலை தொடர்ந்தால், சென்னை தனது பாரம்பரியமான பெருமையை தக்கவைத்துக்கொள்வது கடினமானதாக இருக்கும். அதுமட்டுமின்றி கொச்சியும் சென்னையை முந்திவிடும். அதற்குள் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Author: Bala Siva