நாகை சின்மயா மிஷன் பள்ளியில் 50 ஆலயங்களின் திருப்பணி நிறைவு விழா மற்றும் பகவத் கீதை பாராயணம் விழா நடைபெற்றது. இதில், தமிழக பாஜவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
அங்கு அவர் பேசியதாவது; ஹிந்து தர்மம் காலம் காலமாக புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் பிரச்னை வரும் போது எல்லாம் பெரிய குருமார்கள் அதை தீர்த்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எந்த தர்மமாக இருந்தாலும் காலத்திற்கு தகுந்தாற்போல் தம்மை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
அத்துடன், கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்து தர்மத்திற்கு வந்து சோதனைகள் எண்ணிலடங்காதது. இந்தியாவை பொறுத்தவரை இரண்டே மதங்கள் தான். இன்று இந்துவாக இருப்பவர்கள், இன்னொருவர் இந்துக்களாக இருந்தவர்கள் என்று சுவாமி சின்மயானந்தா அடிக்கடி கூறுவார் என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அதாவது, காலம் மாறும் போது, சூழ்நிலைகள் நிறைய நண்பர்கள் மதம் மாறி போய் கொண்டே இருக்கின்றனர். எல்லா மதமும் சம்மதம் என்ற மதத்தில் நாம் இருக்கின்றோம். இந்த மதம் யாரை பார்த்தும் பயப்பட வேண்டியது இல்லை. அப்படித்தான் ஒவ்வொரு மதத்தையும் நாம் அனுமதித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாம் கீதை சொல்லியபடி வாழ வேண்டும் என்றால் சத்தியம், அஹிம்சை என்ற இரண்டு விஷயத்தை நாம் கடைபிடிக்க வேண்டும் என்றும், எந்த வேலை செய்தாலும் அதன் மீது ஒட்டாமல், அதன் பலன் மீது பற்று இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.