பன்னாட்டு டேக்ஸி சேவை நிறுவனமான ஊபர் தற்போது இந்திய சந்தையில் புதிய திருப்பத்தை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை ஓலா நிறுவனத்தைத் தங்களின் முக்கிய போட்டியாளராகக் கருதி வந்த ஊபர், தற்போது ரேபிடோ தான் உண்மையான போட்டியாளராக மாறியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊபர் தலைமை நிர்வாக அதிகாரி டாரா கோஸ்ரோஷாஹி சமீபத்திய பேட்டியில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த புதிய நிலைமைக்கு ஓலா சந்திக்கும் சில பிரச்சனைகள் முக்கிய காரணமாக உள்ளன. ஓலா தனது மின்சார ஸ்கூட்டர் பிரிவில் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற முடியாததோடு, ஓட்டுநர்களுக்கான கமிஷன் விஷயத்திலும் எதிர்விளைவுகளை சந்தித்து வருகிறது. இவை அனைத்தும் ஓலாவின் சந்தை பங்கை குறைக்க செய்துள்ளன.
இதையடுத்து, 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரேபிடோ, துவக்கத்தில் இருசக்கர வாகன டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தி, விரைவில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றது. பின்னர், ஆட்டோ மற்றும் கார் சேவைகளையும் சீராக விரிவுபடுத்தி, ஊபருக்கும், ஓலாவுக்கும் நேரடியான போட்டியாக மாறியுள்ளது. குறிப்பாக, ரேபிடோவின் செயல்பாடுகள் சிறிய நகரங்களிலும் விரைவாக விரிந்துள்ளன.
குறைந்த கமிஷன் வழங்குவது தான் ரேபிடோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்கிறது. ஊபரும் ஓலாவும் 18% முதல் 22% வரையான கமிஷன் வசூலிக்கும் நிலையில், ரேபிடோ 0% முதல் 5% மட்டுமே வசூலிக்கிறது. இதனால் ஓட்டுநர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது மாதம் சுமார் 20 லட்சம் ஓட்டுநர்கள் ரேபிடோவின் தளத்தில் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.