மத்திய அரசு கொண்டு வந்த பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி பிரதமர் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று 30 நாட்களுக்கு விடுதலையாகாவிட்டால் அவர்களது பதவியை பறிக்க புதிய மசோதா நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த சட்டத்தின் அவசியம் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “நாட்டின் பிரதமரோ அல்லது முதலமைச்சரோ சிறையில் இருந்துக் கொண்டு ஒரு அரசாங்கத்தை நடத்துவது சரி என்று நினைக்கிறீர்களா? சுதந்திரம் பெற்றதிலிருந்து பல தலைவர்கள் சிறைக்கு சென்றுள்ளனர். ஆனால் சமீபமாக சிறைக்கு சென்ற பிறகும் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்யா நிலை உருவாகி வருகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை. டெல்லி முதலமைச்சரும், அமைச்சர்களும் ராஜினாமா செய்யவில்லை. இது உலகளவில் இந்திய ஜனநாயகத்தின் மதிப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது.
முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அப்போது மன்மோகன்சிங் ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வந்தபோது அதை முட்டாள்தனம் என ராகுல்காந்தி பகிரங்கமாக பேசினார்.
சொந்த கட்சியின் பிரதமரால் எடுக்கப்பட்ட முடிவையே விமர்சித்தவர் இன்று பீகாரில் ஆட்சி அமைக்க அதே லாலு பிரசாத்தை கட்டிப்பிடிக்கிறார். இது இரட்டை வேடம் இல்லையா? அவரால் மன்மோகன் சிங் உலகம் முழுவதும் ஒரு பரிதாபத்திற்குரிய நபராக ஆகிவிட்டார்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K