அதிமுகவை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்துவதாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் கோயம்பேட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலில் முதலமைச்சர் ஸ்டாலினை குறித்த விமர்சனங்களை முன்வைத்தார்.
“ஒரு மாநிலத்தின் முதல்வர் ஓரவஞ்சனையுடன் நடந்துகொள்ளக் கூடாது. பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால் இந்து பண்டிகைகளை மட்டும் புறக்கணிக்கிறார். இது தவறு. முதலமைச்சர் இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
ஸ்டாலின் கேரளாவில் நடைபெற்ற ஐயப்பன் பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டதை ‘நாடகம்’ என்று அவர் விமர்சித்தார். “இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாதவர் அங்கே செல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. ஐயப்ப பக்தர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” என்றும் கூறினார்.
அதிமுகவும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் கையில் உள்ளது என விஜய் வைத்த குற்றச்சாட்டை பற்றி கேட்கப்பட்ட போது, எல். முருகன் கூறியதாவது:“ஆர்.எஸ்.எஸ் என்பது நூற்றாண்டு கண்ட சமூக சேவைக்கான இயக்கம். இந்த இயக்கம் குறித்து ஜவஹர்லால் நேரு, பாபாசாகேப் அம்பேத்கர் உள்ளிட்டோரும் பாராட்டி பேசியுள்ளனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் நிகழ்வுகளில் விருந்தினர்களாகவே பங்கேற்றுள்ளனர்.
அரசியல் கட்சிகளை நல்வழிப்படுத்தும் அனைத்து கொள்கைகளும் இந்த இயக்கத்தில் உள்ளது. அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அதிமுகவை வழிநடத்தினால் அதில் என்ன தவறு?
மாறாக, விஜய்தான் முதலில் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்து அரசியல் தெளிவு பெற வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் மூலம் தான் அவருக்கு சரியான அரசியல் அறிவு கிடைக்கும்” என அவர் சவால்விட்டார்.