துப்புரவு பணியாளர்களைத் தொடர்ந்து சத்துணவு ஊழியர்களையும் திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது:
''கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி எண் 313-ல் “சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாகப் பணியமர்த்துவோம்” எனப் பொய் வாக்குறுதி கொடுத்து அம்மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, அரியணை ஏறியதும் வழக்கம் போல அந்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது.
தூய்மைப் பணியாளர்களைப் போலவே நான்காண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்து இறுதியில் பொறுமையிழந்த சத்துணவு ஊழியர்கள் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆளும் அரசின் நிர்வாக அலட்சியத்தை எதிர்த்து தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் சத்துணவு ஊழியர்களுக்கு தமிழக பாஜ சார்பில் முழு ஆதரவு அளிக்கப்படும் எனவும், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு அம்மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.'' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.