ரூ.28.54 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க.நகர் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள்: நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு..!
Seithipunal Tamil August 29, 2025 09:48 AM

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலத்தில் ரூ.28.54 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நடந்து வருகின்றது. இதனை அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி. கே. சேகர்பாபு, நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதன்போது, வார்டு-69, முத்துகுமாரப்பா தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.13.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினைப் பார்வையிட்டுள்ளதோடு, ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அத்துடன், இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சமுதாய நலக் கூடம், தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 40,300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் 35 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனங்கள், 50 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது.

மேலும், முதல் தளத்தில் 435 இருக்கைகளுடன் உணவு அருந்தும் இடம், இரண்டாம் தளத்தில் 800 இருக்கைகளுடன் திருமண நிகழ்வு கூடம், மூன்றாம் தளத்தில் 10 எண்ணிக்கையிலான ஓய்வறைகளுடன் கட்டப்பட்டு வருகிறது. 

இதனை தொடர்ந்து, சோமையா தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில், கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

அத்துடன், ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளிக் கட்டடப் பணி, மேயர் முனுசாமி விளையாட்டுத் திடல் மற்றும் பூங்காவில் உள்ள கால்பந்து மைதானம், இறகுபந்து மைதானத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், வார்டு-70க்கு உற்பட்டகபிலர் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளிக் கட்டடப் பணிகள் என்பனவற்றையும் அமைச்சர் பி. கே. சேகர்பாபு நேரில் பார்வையிட்டுள்ளதோடு,பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வின் போது, சென்னை மேயர் பிரியா, துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர். கௌஷிக், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.