வேளாங்கண்ணி திருவிழா… பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. என்னென்ன? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
TV9 Tamil News August 29, 2025 11:48 AM

நாகப்பட்டினம், ஆகஸ்ட் 28 : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய (Velakanni Church Festival) திருவிழா தொடங்குவதையொட்டி, 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான நாளை முதல் கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த போராலயத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, அனைத்து மதங்களையும் சார்ந்த பக்தர்கள் வழிபடும் தலமாக உள்ளது. இந்த பேராலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அனைத்து மதங்களைச் சார்ந்த பக்தர்கள் ஏசுவின் தாயாக கருதப்படும் மாதாவுக்கு முடிக் கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுகிறது. ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, ரோலய ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு திருவிழா 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி (நாளை) கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. நாளை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

Also Read : விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிக்க சென்ற சிறுவன்.. துடிதுடித்து பலியான சோகம்.. பெற்றோரே உஷார்!

 வேளாங்கண்ணி கடற்கரையில் குளிக்க தடை

மாதாவின் பிறந்தநாளாக கருதப்படும் 2025 செப்டம்பர் 8ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறுகிறது. இந்த 10 நாட்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி 2025 செப்டம்பர் 7ஆம் தேதி இரவு நடைபெறும்.

இந்த 10 நாட்களும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் திருப்பலி நிறைவேற்றப்படும்.  இந்த திருவிழா 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான நாளை கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் நிலையில், பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதாவது, விழா நடைபெறும் 10 நாட்களுக்கு பக்தர்கள் வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். 

பலத்த போலீஸ் பாதுகாப்பு

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுளளது. நாகை மாவட்ட சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பேராலயத்தை சுற்றியும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று வர, ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Also Read : சித்தியிடம் தொடர்ந்து தகராறு.. அடித்துக்கொன்ற தந்தை.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்!

உள்ளூர் விடுமுறை

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவையொட்டி, அம்மாவட்டத்தில் உள்ள இரண்டு வட்டங்களுக்கு 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுளளது. நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.