இந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முருகதாஸுக்கு இந்த படம் மிக மிக முக்கியமான படம் ஏனென்றால் கடைசியாக அவர் ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்தடுத்து படங்கள் பண்ணிக் கொண்டிருந்தாலும் அது எதுவுமே பெயர் சொல்லும் அளவிற்கு கூட வெற்றி பெறவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட ஏ.ஆர்.முருகதாஸ் ”மதராஸி படம் எனக்கு கஜினி மாதிரி திரை கதையும் துப்பாக்கி மாதிரி ஆக்சன் காட்சிகளும் கொண்ட படமாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு சிறந்த இயக்குனர் என்றாலும் சமீபத்திய படங்கள் அவருக்கு எதுவும் கை கொடுக்காமல் சினிமா ரசிகர்கள் அவரை அவுட்டேடட் இயக்குனர் என்று அழைக்கின்றனர். 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரிட் இயக்குனர் தற்போது 2கே கிட்ஸ்களையும், ஜென்சி கிட்ஸ்களையும் திருப்தி படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். ஒரு வகையில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இந்த படம் வாழ்வா சாவா? போராட்டம் தான்.
ஏனெனில் இந்த படம் இவருக்கு ஹிட் ஆகவில்லை என்றால் இனிமேல் இவர் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள், ப்ரொடியூசர்கள் தயங்குவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு சிறந்த உதாரணமாக தற்போது விளங்குவது இயக்குனர் ஷங்கர்தான். பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தாலும் சமீபத்தில் இரண்டு படங்கள் அவருக்கு ஆறுதல் வெற்றி கூட கொடுக்காமல் அட்டர் ஃபிளாப் ஆனது.
இதனாலையே தமிழ் சினிமாவில் அவர் ஓரங்கட்டப்பட்டார். அதனால் முருகதாஸுக்கு ஒரு பயம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் கமர்சியலாக இருந்தாலும் அதுவும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது அனிருத்தும் தன்னுடைய பங்கிற்கு முருகதாஸின் கெரியரை முடித்து விட பிள்ளையார் சுழி போட்டுள்ளார். அதன்படி மதராஸி படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் ஒன்பது பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறார் ஆனால் அதில் மக்களிடம் கவர்ந்த பாடல் என்னவோ ”சலம்பல” மட்டும்தான்.
இன்றைய ஜென்சி கிட்ஸ்களின் ஃபேவரிட் சிங்கர் சாய் அபயங்கர் இந்த பாடலை பாடியிருப்பார். அதைத் தவிர வேறு எந்த பாடலும் மக்களின் முணுமுணுப்பில் கூட இல்லை. அனிருத் இடமிருந்து இந்த மாதிரியான பாடல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். பாடல்களில் கோட்டை விட்ட அனிருத் பின்னணி இசையில் படத்தை தூக்கி நிறுத்துவாரா ? என்பது படம் வெளியான பிறகு தான் தெரியும்.
இந்நிலையில் மதராஸி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் அனிருத்.” ஒரு நாள் நானும் பீல்ட் அவுட் ஆவேன். அந்த டைம்ல சிவகார்த்திகேயன் ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரி” என்று சொல்லி இருப்பார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மதராஸி படத்துக்கு அனிருத்தின் எந்த பாடல்களும் ரசிக்கும் படியாக இல்லை என ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒருவேளை இது முன்கூட்டியே தெரிஞ்சு தான் நான் பீல்ட் அவுட் என்று அனிருத் சொல்லிவிட்டாரோ ? என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.