தமிழ்நாடு அரசியலில் விஜய்யின் வருகை, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என இந்தியா டுடே - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தவெக, சீமானின் நாதக, தேமுதிக, பாமக என அனைத்துக்கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்வது, களப்பணியாற்றுவது என தீவிரமாக தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதுஒருபுறமிருக்க முன்னணி ஊடக மற்றும் கருத்து கணிப்பு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை தொடங்கியுள்ளன. அதன்படி, மக்களவைத் தொகுதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே - சி வோட்டர் வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெற்றால் கூட திமுக கூட்டணியை மாபெரும் வெற்றி பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக.1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் ஆட்சிக்கு எதிரான மனநிலையை கடந்து தமிழ்நாட்டில் உள்ள 36 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவுவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதேநேரம் அதிமுக பாஜக கூட்டணி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு உள்ளிட்ட மாநில உரிமை சார்ந்த விவகாரங்களில், ஒன்றிய அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டங்களுக்கு தமிழ்நாடு மக்களின் ஆதரவு உள்ளதாகவும் சி வோட்டர் தெரிவித்துள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் 47 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், இன்று தேர்தல் நடத்தப்பட்டால் கூட தமிழ்நாட்டில் 48 சதவிகித வாக்குகள் திமுகவிற்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் புதுவரவான தவெக விஜய்யின் வருகை, திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளையே பிரிப்பார் என்றும், அதிமுகவுக்கே அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவார் என்றும் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நடந்தால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரித்து, திமுக கூட்டணிக்கான வெற்றியை உறுதிப்படுத்தும் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று மக்களவையில் தேர்தல் நடந்தால் கூட மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.