தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள வால்யநாயக் தண்டா கிராமத்தில் தனித்துவமான மரபு ஒன்று பின்பற்றப்படுகிறது. இங்கு, திருமணமாகி மருமகளாக வரும் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இறைச்சி உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு காலரா நோய் பரவியபோது, கிராமத் தலைவர் சீதம்மா மற்றும் மாரியம்மாவை வணங்கி, “காலரா தாக்காவிட்டால் மருமகள்கள் இறைச்சியைத் தொட மாட்டோம்” என சத்தியம் செய்தனர். அன்று முதல் காலரா கிராமத்தை அண்டவில்லை என நம்பப்படுவதால், இந்த வழக்கம் தொடர்கிறது. இதை தெய்வங்களின் அருளாகக் கருதி, கிராம மக்கள் இந்த மரபை கடைப்பிடிக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் துர்கா பவானி விழாவுக்கு முந்தைய நாள், சீதம்மா வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காக வெள்ளி அம்மன் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் பெட்டியில் வைத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன.
கிராமத்தில் ஆண்களோ, குழந்தைகளோ இறைச்சி உண்ண வேண்டுமெனில், கிராமத்திற்கு வெளியே தனி பாத்திரங்களில் சமைத்து, உண்டு, குளித்த பின்னரே வீட்டிற்கு திரும்புவர். இந்த விசித்திர மரபு, கிராமத்தின் தெய்வ நம்பிக்கையையும், ஒற்றுமையையும் பறைசாற்றுவதாக உள்ளது.