சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்களின் விலை ஏற்கனவே பலமுறை உயர்த்தப்பட்டு, அதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்நிலையில் சுங்கக் கட்டணங்களையும் மீண்டும் உயர்த்துவது, மக்களின் வாழ்வாதாரத்தில் பொருளாதாரப் போர் தொடுக்கப்பட்டதற்குச் சமம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடவேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி, சுங்கக் கட்டணத்தை உயர்த்தும் மத்திய பாஜக அரசின் செயல்முறை துளியும் மனச்சான்றற்ற கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடாகும்” என்றும் சீமான் குற்றஞ்சாட்டினார்.
“ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கப்பட்ட பணிக்கான முதலீட்டினைவிட பல மடங்கு அதிகமாக, சில ஆண்டுகளிலேயே தனியார் நிறுவனங்கள் வசூல் செய்துவிடுகின்றன. அதன் பிறகும் 15–20 ஆண்டுகளாக எந்தக் கணக்குமின்றி தொடர்ச்சியாக சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றன. இது மக்கள் மீது நடத்தப்படும் வெளிப்படையான கொள்ளை. வசூல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு, பராமரிப்பு செலவு எவ்வளவு, மீதம் எங்கு செல்கிறது என்பது குறித்து அரசு வெளிப்படையாக தகவல் தரவில்லை” என்றும் கூறியுள்ளார்.
சுங்கக் கட்டண உயர்வை கண்டித்த அவர், “50 கிலோமீட்டருக்கொரு சுங்கக் கட்டணம் செலுத்தும் நிலை இந்தியாவில் மட்டுமே நிலவுகிறது. இது கூட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இல்லாத அடிமைத்தனம். மக்கள் வஞ்சிக்கப்படுவதை நாங்கள் அமைதியாகக் காணமாட்டோம்” என்று வலியுறுத்தினார்.
அதேபோல், “மக்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளை நடத்தும் தனியார் சுங்க நிறுவனங்களை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் நாம் தமிழர் கட்சி முற்றுகையிட்டு, தமிழர் நிலத்தில் எந்த சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்க முடியாத நிலையை உருவாக்கும்” என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதவிர வாகன ஓட்டிகள் பலரும் சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா்.