கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் அங்கு கிடந்தவர் இறக்கவில்லை என்பதும் சுய நினைவின்றி கிடப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை 108-ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் விசாரணை நடத்தியபோது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர் வார இறுதி நாள் விருந்தில் பந்தயம் கட்டி மது அருந்தியதில் மயங்கி சாய்ந்தவர் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-
"பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த திருமணமாகாத தொழிலாளி ஒருவர், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை, நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்பாராம். அதன் படி அவர் நேற்று வழக்கம் போல் மது விருந்தில் பங்கேற்றுள்ளார். அப்போது நண்பர்கள் வைத்த பந்தய பணத்திற்காக விபரீதத்தை உணராமல் பெரிய பாட்டில் மதுபுட்டியை திறந்து அப்படியே குடித்துள்ளார். அதனால் தான் அவர் சுய நினைவு இழந்து மயங்கி சரிந்துள்ளார்.
இதைப்பார்த்த நண்பர்கள் பயந்து மயங்கியவரை இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் அச்சத்தில் போலீசாருக்கு தொழிலாளி இறந்து கிடப்பதாக தகவல் அளித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள அந்த நபர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கிய தொழிலாளியுடன் மது அருந்திய மேலும் சில நண்பர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம்.