மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு 11 மணிக்குப் பிறகு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 30ஆம் தேதி நள்ளிரவு பல இடங்களில் பெய்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதற்கிடையில், தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை நல்ல மழைப்பொழிவை அளிக்கும் என்றும், சென்னையில் புயல் அபாயம் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்தாவது: “அக்டோபர் முதல் டிசம்பர் வரை பருவமழை காலத்தில், வலிமண்டல மற்றும் கடல் சார்ந்த அமைப்புகளைப் பார்க்கும்போது லா நினா உருவாகும் வாய்ப்பு அதிகம். இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) நிகழ்வில் இந்தாண்டு எதிர்மறை நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் லா நினா ஆண்டுகளாகவே இருந்துள்ளன. 2023ஆம் ஆண்டில் மட்டும் எல் நினோ ஆண்டாக அமைந்தது.
இந்த ஆண்டு லா நினா தாக்கம் இருப்பதால் தமிழகத்தில் பருவமழை நல்ல மழையை அளிக்கும். தாமதமாகத் தொடங்கினாலும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தீவிர மழை, தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம், புயல் போன்ற அமைப்புகள் உருவாகும் வாய்ப்பு அதிகம்” என்றார்.
வானிலை அறிவியல்படி, லா நினா மற்றும் எல் நினோ ஆகியவை கடலின் வெப்பநிலை மாற்றத்தால் உருவாகும் நிகழ்வுகள்.
லா நினா காலத்தில் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடல் சில பகுதிகள் குளிர்ச்சியாகும். எல் நினோ காலத்தில் அந்த நீர் வழக்கத்தை விட குறைந்தது 0.5 டிகிரி அதிகமாக சூடாகும். இந்த மாற்றங்கள் உலகளாவிய வானிலையையும் பருவமழையையும் தீர்மானிக்கின்றன.