கேரளா ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியில், 17 வயது பள்ளி மாணவனை அழைத்து சென்ற 27 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில், சேர்த்தலா பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவன் திடீரென மாயமானதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதே சமயம், பள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த சனுஷா (27) என்ற இளம்பெண்ணும் காணாமல் போனதை தொடர்ந்து, சேர்த்தலா போலீசார் இருவரையும் தொடர்புபடுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பள்ளி மாணவனுக்கும் சனுஷாவுக்கும் முன்பே பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சனுஷா அந்த மாணவனை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என்பது உறுதியானது.
இருவரும் செல்போன் பயன்படுத்தாமலிருந்ததால், அவர்களை கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், போலீசார் அவர்களது முந்தைய செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மெசேஜ் மற்றும் வாட்ஸ் அப் தகவல்களின் மூலம் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், சனுஷா தனது உறவினருக்குச் செய்தி அனுப்பியதன் மூலம், அவர்கள் கொல்லூரில் தங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று இருவரையும் பத்திரமாக கைது செய்தனர். பின்னர், இருவரையும் சேர்த்தலாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
மாணவனை அழைத்து சென்றதற்காக, சனுஷா மீது போக்சோ சட்டம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், கொட்டாரக்கரா சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம், மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.