சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்களும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி 189-ஆவது வார்டு கவுன்சிலர் பாபு, 5-ஆவது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-ஆவது வார்டு கவுன்சிலரும் மண்டல குழு தலைவருமான ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் 11-ஆவது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பதவி நீக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனை எதிர்த்து நான்கு பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் தரப்பில், பதவி நீக்கம் செய்யப்படும் முன் வழங்கப்பட்ட நோட்டீஸ்களுக்கு விரிவான பதில் அளித்திருந்தும், அவற்றை பரிசீலிக்காமல், மேலும் விளக்கம் தருவதற்கு அவகாசம் வழங்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில், பதவி நீக்க உத்தரவுகளுக்கான காரணங்கள் விளக்கப்பட்டன. இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி என். மாலா, கவுன்சிலர்கள் அளித்த பதில்கள் கவனிக்கப்படாமல் அரசு நடவடிக்கை எடுத்தது தவறானது என்று தெரிவித்தார்.
அதன்பேரில், நான்கு பேரையும் பதவி நீக்கி வெளியிடப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்தார். மேலும், அவர்களின் பதில்களை பரிசீலித்து, தேவையான அவகாசம் வழங்கிய பிறகே சட்டப்படி புதிய உத்தரவை நான்கு வாரங்களில் பிறப்பிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.