France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?
Vikatan September 03, 2025 02:48 PM

ஐரோப்பாவில் இன்னும் ஒரு வருடத்துக்குள் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதனால், இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளை தயாராக இருக்கும்படி கூறியுள்ளது பிரான்ஸ் அரசு.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் முடிவை எட்ட முடியாத சூழலில், ரஷ்யா - நேட்டோ நாடுகள் இடையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

NATO Summit France சுகாதாரத்துறை அறிவிப்பு

இந்த சூழலில் 2026க்குள் பிரான்ஸில் உள்ள மருத்துவமனைகள் தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவு தயாராக வேண்டுமென அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இதில் போர் கால சூழலையும் கணக்கில்கொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

Le Canard enchaîné என்ற பிரான்ஸ் செய்தித்தாள் கூறுவதன்படி, 10 முதல் 180 நாள்களில் ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயாராக வேண்டுமென்றும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அருகில் மருத்துவ முகாம்கள் அமைக்க பிரான்ஸ் திட்டமிடுவதாகவும் சுகாதாரத்துறையின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Catherine Vautrin சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வதென்ன?

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கேத்தரின் வௌட்ரின், "ஒரு நாடு நெருக்கடிகளையும் அவற்றின் விளைவுகளையும் எதிர்பார்ப்பது சாதாரணமானதுதான்... கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது நாம் எந்த அளவு முன் தயாரிப்பு இல்லாமல் இருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

2022 முதல் தொடரும் தயாரிப்புகள்

சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸ் ஆயுத மோதல் ஏற்படும்போதும், இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற துர்நிகழ்வுகளின் போதும் மக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து 20 பக்கங்கள் கொண்ட survival guides (உயிர் பிழைப்பதற்கான வழிகாட்டல்கள்) வெளியிட்டது. அதில் தண்ணீர், பதிவு செய்யப்பட்ட உணவு, பேட்டரிகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அணு ஆயுதத் தாக்குதல்களைக் கையாள்வது மற்றும் உள்ளூர் பாதுகாப்புப் படைகளில் சேருவது போன்றவற்றுடன், 63 நடவடிக்கைகள் அதில் கூறப்பட்டிருந்தன.

2022ம் ஆண்டு முதலே பிரான்ஸ் இத்தகைய தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் மொத்த வருமானத்தில் ராணுவத்துக்கு செலவழிக்கப்படும் 2% சமீப ஆண்டுகளில் 3-3.5% ஆக உயர்ந்திருக்கிறது.

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்தாரா? - 24 வயது இடைவெளி; இந்த ஆசிரியர் மாணவர் காதல் கதை தெரியுமா?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.