த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 'உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்' என்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தமிழக வெற்றிக் கழக தலைவரின் வழிகாட்டுதலின்படி, வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்கு பெற்று ஆட்சி அமைக்க தேவையான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலை எதிர்கொள்ள நம் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது.
இதனிடையே,மக்கள் மத்தியில் த.வெ.க. பெறும் பெரும் வரவேற்பை மடைமாற்றம் செய்யும் நோக்கில், புதுச்சேரியில் த.வெ.க. கூட்டணி அமைக்கிறது என்ற அடிப்படை ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான செய்தியை ஒரு வார இதழ் வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தி முற்றிலும் தவறானது; ஆதாரமற்ற வதந்தி மட்டுமே. இத்தகைய பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். புதுச்சேரியில் எந்தக் கட்சியுடனும் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.மேலும், புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களை கழகத் தலைவர் விரைவில் அறிவிப்பார்.
மேலும், தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளும் கழகத் தலைவரின் தீர்மானம் அடிப்படையிலேயே இருக்கும். ஆகையால்,மக்களை குழப்பும் வகையில், யூகங்களின் அடிப்படையில், பொய்யான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று, கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.