இந்திய அரசின் வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்து மோசடி செய்ததாக, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் உட்பட 9 பேர் மீது ஆகஸ்ட் 20 அன்று சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
போலி தங்க நகைகள் மூலம் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக சுங்கத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
போலி தங்க நகைகளைக் காட்டி வரிச் சலுகையைப் பெற்றது எப்படி? மோசடியின் பின்னணியில் சுங்கத்துறை அதிகாரிகளின் பங்கு என்ன?
சென்னை சுங்கத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவில் துணை ஆணையராக பணியாற்றும் கனக சுப்ரமணியன் என்பவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளிக்கப்பட்ட புகாரில், 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தங்க நகை ஏற்றுமதி, இறக்குமதியில் மோசடி நடந்ததாகக் கூறியிருந்தார்.
சென்னையில் தங்க நகைகளை வாங்கி விற்கும் மொத்த வியாபாரிகள் மற்றும் நகை வியாபாரிகள் உள்ளிட்டோர், வெளிநாடுகளில் இருந்து 24 காரட் தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்கின்றனர்.
இவை மதிப்பு கூட்டப்பட்டு 22 காரட் தரத்திலான தங்க நகைகளாக தயாரிக்கப்பட்டு வளைகுடா நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அவ்வாறு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு ஈடாக, 22 காரட் தங்க நகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகக் கூறி, போலி நகைகளைக் கணக்கு காட்டி ஏமாற்றியுள்ளதாக, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புகார் மனுவில் கூறப்பட்டது என்ன?கனக சுப்ரமணியன் அளித்துள்ள புகார் மனுவில், சென்னை விமான நிலைய சரக்குகளை கையாளும் (cargo) பிரிவில் பணியாற்றும் சுங்க அதிகாரிகளுடன் சதி செய்து, நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்துக்கு பதிலாக போலி நகைகளை ஏற்றுமதி செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சுங்கத்துறையில் பணியாற்றும் கண்காணிப்பாளர்கள் அலோக் சுக்லா, துளசிராம் மற்றும் நகை மதிப்பீட்டாளர் சாமுவேல் தீபக் ஆகியோர் மீது 2023, ஜூன் மாதம் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து வருவாய் புலனாய்வுத்துறை (DRI) விசாரணை நடத்தியுள்ளது.
2020 நவம்பர் முதல் 2022 ஜனவரி வரை சென்னை, சௌகார்பேட்டையில் தங்க நகை வியாபாரம் செய்து வரும் சுனில் ஜுவல்லரி, ஸ்ரீகல்யாண் ஜுவல்லரி, சிரோயா ஜுவல்லரி மற்றும் பாலாஜி ஜுவல்லரி ஆகிய நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட நகைகள், 'போலியாக இருக்கலாம்' என சந்தேகிக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
சுங்கத்துறையின் கண்காணிப்பாளர்கள் சுரேஷ்குமார், அலோக் சுக்லா, துளசிராம், நகை மதிப்பீட்டாளர் சாமுவேல் தீபக் ஆகியோர் நகைக்கடைக்காரர்களின் சரக்குகளை, உண்மையானவை என சான்றளித்து முறைகேடு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் சுங்க முகவர் மாரியப்பன் என்பவரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்கத்துக்குப் பதிலாக செம்பு, பித்தளைமோசடியைக் கண்டறிந்த விதம் குறித்து சி.பி.ஐ வெளியிட்டுள்ள எஃப்.ஐ.ஆரில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில், 31.1.2022 அன்று சுனில் ஜூவல்லரியின் ஷிப்பிங் ரசீது எண் 7862422ஐ கொண்ட சரக்கு, விமான நிலைய கார்கோ புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ரசீதில் குறிப்பிட்டுள்ள எடைக்கும் உண்மையான எடைக்கும் முரண்பாடு இருந்ததன் காரணமாக இவை தடுத்து நிறுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்ட ரசீது கண்காணிப்பாளர் துளசிராம் என்பவரால் ஆய்வு செய்யப்பட இருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
அதே சரக்கை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் தங்க முலாம் பூசப்பட்ட செம்பு, பித்தளை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதே தேதியில் (31.01.2022) ஸ்ரீபாலாஜி ஜுவல்லர்ஸ் அனுப்பிய சரக்கு திரும்பப் பெறப்பட்டு மார்ச் 8, 2022 அன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தங்கத்தால் பூசப்பட்ட செம்பு வளையல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2022, பிப்ரவரி 1 ஆம் தேதியன்று சுனில் ஜுவல்லரியின் சரக்கு, வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்காததால் சரக்கு பறிமுதல் செய்யப்பட்டதாக, முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக வளையத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள், சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்துக்குப் பதிலாக போலி நகைகளுக்கு சான்று பெற்று மோசடியாக ஏற்றுமதி செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
சிரோயா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஸ்ரீதீபக் சிரோயா, வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் வாக்குமூலம் அளித்ததாகவும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
அதில், போலி தங்க நகைகளை உண்மையான தங்கம் என சான்று பெற்று அவற்றை ஏற்றுமதி செய்துள்ளனர். இதற்காக சுங்கத்துறை அதிகாரிகள், பணம் உள்பட சில சலுகைகளைப் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்காக ராஜ்காட், கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட கவரிங் நகைகளை 22 காரட் தங்க நகை எனக் கூறி ஆவணங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.
அந்தவகையில், இரண்டு வருட காலத்தில் சுமார் 2,600 கிலோ அளவுக்கு கவரிங் நகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதற்கு ஈடாக இறக்குமதி செய்யப்பட்ட தங்கக் கட்டிகளை உள்நாட்டுச் சந்தையில் விற்றுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்துக்கு அதன் மீதான சுங்க வரியை திரும்பப் பெறுவதற்காக போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்ததாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
என்னென்ன பிரிவுகளில் வழக்கு?இந்த வழக்கில், சட்டப்பிரிவு 120-B r/w, 420 IPC மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988, 7வது பிரிவின்கீழ் ஒன்பது பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நான்கு பேர் சுங்கத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளாக உள்ளனர்.
மோசடி, ஏமாற்றுதல், பொது ஊழியராக தேவையற்ற நன்மைகளைப் பெறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளை இந்த சட்டப்பிரிவுகள் குறிப்பிடுகின்றன. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தீபக் சிரோயா, சந்தோஷ் கோத்தாரி, சுனில் பார்மர், சுனில் சர்மா ஆகியோர், நகைக்கடை உரிமையாளர்களாக உள்ளனர்.
வழக்கு தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 30 அன்று சென்னையில் ஒன்பது இடங்களில் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வழக்கில் கூறப்பட்டுள்ள ஒன்பது பேரிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
'வரிச்சலுகையைப் பயன்படுத்தி மோசடி'"இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு இணையாக தங்க நகைகளை ஏற்றுமதி செய்துகொள்ளலாம். அதற்கு 6 சதவிகித வரி விலக்கு உள்ளது. போலி நகைகளைக் கொடுத்து அதிகாரபூர்வ முறையில் தங்கத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர்" எனக் கூறுகிறார், சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வெளிநாடுகளில் இருந்து தங்கத்தைக் கொண்டு வருவதற்காக சில தவறான உத்திகள் கையாளப்படுகின்றன. ஏற்றுமதி, இறக்குமதிக்காக இந்திய அரசு வழங்கும் சலுகையை தவறாகப் பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளனர்" என்கிறார்.
"இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வதாக கூறி மோசடியை அரங்கேற்றியுள்ளனர். போலி நகைகளைக் கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கக் கட்டிகளை என்ன செய்தனர் என்பது முக்கியமானது" எனக் கூறுகிறார், முதலீட்டு ஆலோசகர் நாகப்பன்.
"அவற்றை கறுப்புப் பணமாக மாற்றியிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறும் நாகப்பன், "தங்க நகைகளை ஏற்றுமதி செய்ததில் ஏற்பட்ட மோசடியைப் போல இறக்குமதியிலும் எந்தளவுக்கு மோசடிகள் நடந்துள்ளன என ஆராய வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம் ஏன்?"வெளிநாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு சில சலுகைகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதற்கான வரிச் சலுகையைப் பெறுவதற்காக இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகின்றன" என்கிறார், சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி.
இதை டி.எஃப்.ஐ.ஏ (Duty-Free Import Authorisation) என இந்திய அரசின் அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் இணையதளம் கூறுகிறது. ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம் என்ற பெயரில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, எரிபொருள், மூலப்பொருள் மற்றும் இதர பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பொருள்களை முதலில் ஏற்றுமதி செய்துவிட்டு பிறகு இறக்குமதிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் இவை வழிவகை செய்கிறது.
அதேநேரம், இதற்கான அடிப்படை சுங்க வரியை (Basic customs duty) செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் இந்திய அரசின் அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகம் கூறுகிறது.
உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் முன்கூட்டிய அங்கீகார திட்டத்தின்படி (Advance Authorisation) ஏற்றுமதியில் வரியில்லாத இறக்குமதிக்கு இந்த திட்டத்தின்கீழ் அனுமதி வழங்கப்படுகிறது.
"ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் இது. அமெரிக்காவின் வரிவிதிப்பு முறையால் பிரச்னை ஏற்படுவதால் ஏற்றுமதியை ஊக்குவிப்பது அவசியம். அதேநேரம், தவறுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்கிறார், முதலீட்டு ஆலோசகர் நாகப்பன்.
"தங்கத்தை வைத்து நடக்கும் மோசடி என்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது" எனக் கூறுகிறார், சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி.
"ஏற்றுமதிக்கான சலுகைகளைப் பெறும் முயற்சியில் தரகர்கள் ஈடுபடுவது இல்லை. சில தனியார் நிறுவனங்களே நேரடியாக இதைச் செய்கின்றன. இதனால் ஹவாலா பணமும் உள்ளே வருகிறது" எனக் கூறும் ஜெயந்திலால் சலானி, "பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாக்கும்போது தவறுகள் குறைவதற்கான சூழல் ஏற்படும்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு