நெல்லையில் வாலிபருக்கு மது பாட்டிலால் குத்து ஏற்பட்ட சம்பவத்தில் காகிதம் சேகரிக்கும் 2 சிறுவர்களை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.
தென்காசி மாவட்டம் ஆளடி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 28). இவர் தனது நண்பரான ரமேஷ் என்பவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி விடுவதற்காக நேற்று நெல்லை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். நண்பரை ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு மனோஜ் குமார் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்து ஜங்ஷன் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு இருக்கக்கூடிய அம்பேத்கர் சிலை அருகே உள்ள கடையில் நின்று உணவு அருந்தி இருக்கிறார். அந்த நேரத்தில் காகிதங்களை சேகரிக்கும் 2 சிறுவர்கள் மனோஜ் குமார் அருகே வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென மனோஜ்குமாருக்கும் அந்த சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த 2 சிறுவர்களும் அருகில் இருந்த காலி மது பாட்டிலை உடைத்து மனோஜ் குமாரை குத்தி உள்ளனர். காயமடைந்த மனோஜ் குமார் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜங்ஷன் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.