கல்வி, வேலைவாய்ப்புகளில் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர் தந்தைப் பெரியார். சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தன ஒழிப்பு, சமூக நீதி ஆகிய இலட்சியங்களை அடைவதற்காக 1925ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். பின்னாட்களில் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகியவற்றின் தலைவராக இருந்தும் இந்த இலட்சியங்களை அடைய போராடினார்.
தந்தைப் பெரியாரிடமிருந்து விலகினாலும், பெரியாரின் இலட்சியங்களை நிறைவேற்றுவதே திமுகவின் இலட்சியம் என வரையறுத்தவர் பேரறிஞர் அண்ணா. இந்தப் பாதையை அடியொற்றியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது கலைஞர் பெரியாரின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கான பல சட்ட திட்டங்களை மேற்கொண்டார். மிகவும் பிற்படுத்தப்படோருக்கான இட ஒதுக்கீடு, விளிம்பு நிலையில் இருந்த அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை என பெரியாரின் கனவுகளை நடைமுறைப்படுத்தினார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்கள், விளிம்பு நிலை மக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் சமூக உயர்வுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் இன்றைக்கு ஏறத்தாழ ஒரு நாளைக்கு 65 இலட்சம் பேர் சராசரியாகப் பயன்பெறுகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பணிக்கு செல்லும் பெண்களின் சதவீதம் பெருமளவு கூடியிருக்கிறது. மாதத்திற்கு 838 ரூபாய் ஒவ்வொருவரும் சேமிப்பதாய் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 இலட்சம் பேருக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இது பெண்களின் குடும்பச்சுமையை குறைப்பதோடு குழந்தைகளின் கல்வி சேமிப்பிற்கும் உதவி வருகிறது. மேலும், பெண்களின் சுயமரியாதையை வலுப்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் ’திட்டம் இந்தியாவிலே முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் உயர் கல்வி சேர்க்கை அதிகளவில் உயர்ந்திருக்கின்றது.
பெண்களின் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றைப் பெறுவதில் உள்ள தடைகள்தான்; அந்த தடைகளைக் களைவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகின்றார். இதற்குப் பின்னால் இருப்பது சுயமரியாதை இயக்கத்தின் இலட்சிய நோக்கே.
பெண்களைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளின் மீது தனிக்கவனம் கொண்டு செயல்படுகிறார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காலை உணவை அளிப்பது பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இதனால் குழந்தைகளின் ஊட்டச் சத்து ஆரோக்கியத்திலும், கற்றல் திறனிலும் குறைபாடு ஏற்பட்டு வந்தது; அதனைக் களைவதற்காக கொண்டுவரப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ உலகளவிலேயே ஒரு முன்னோடி திட்டமாகும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டில் 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்க பள்ளிகளில் படிக்கக்கூடிய 20.59 இலட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் வாயிலாக மாணவர்களின் வருகை எண்ணிக்கை ஏறத்தாழ 9.21 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. மாணவர்கள் நேரத்திற்கு வருகை தரக்கூடிய சதவிகிதம் 98 சதவிகிதமாக இன்றைக்கு வந்திருக்கிறது.
இவ்வரிசையில் விளிம்பு நிலையில் இருக்கும் மாற்று திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறையோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தியிருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்க இடஒதுக்கீடை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகள் அரசியல் அதிகாரம் பெற இருக்கின்றனர். சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் இருந்த மாற்றுத்திறனாளிகளை அதிகாரப்பதவிகளில் அமர்த்துவதன் அவர்களது சுயமரியாதையை உயர்த்திப்பிடித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அரசுப்பதவி உயர்வுகளில் 4% மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடை உறுதிப்படுத்தும் உத்தரவையும் செயல்படுத்தியிருக்கிறார். 2020-21 ஆண்டில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 667 கோடியாக இருந்தது; மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் அந்த தொகை உயர்ந்து 1389 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உரிமைகளையும் அளித்து அவர்களின் சுயமரியாதையை பாதுகாப்பதே சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியம் ஆகும். அந்த வாய்ப்பை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு கவனத்தோடு அளித்துவருவதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.