சென்னையில் வளர்ப்பு நாய்களும் தெருநாய்களும் பொதுமக்களை அடிக்கடி பாதிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற இன நாய்களால் விபத்துகள் அதிகரித்து வருவதால், மாநகராட்சி பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
அதன்படி, நாய்களை சாலையில் அழைத்துச் செல்லும் போது வாய்மூடி அணிவிப்பது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது, உரிமம் பெறுவது, நாய் கடித்தால் உரிமையாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்பன கட்டாயமாக அறிவிக்கப்பட்டன. எனினும், இதை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றவில்லை.
மேலும், பராமரிக்க முடியாத நிலையில் வளர்ப்பு நாய்களை சாலைகளில் விட்டுச் செல்வதும் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி, வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதைக் கட்டாயமாக்க முடிவு செய்தது.
கடந்த ஜனவரி மாத மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, சிப் கொள்முதல் மற்றும் செயலி உருவாக்க பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. அடுத்த மாதம் முதல் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயமாகிறது.
சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11 ஆயிரம் தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், 12,500 பேர் மட்டுமே தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 2 லட்சம் மைக்ரோ சிப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தனியார் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.
தடுப்பூசி செலுத்தும்போது மைக்ரோ சிப் பொருத்தப்படவில்லை என்றால் அவசியம் பொருத்திக் கொள்ள வேண்டும். இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும். மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட நாய்கள் சிறப்பு செயலி மூலம் கண்காணிக்கப்படும்.