உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் இருந்து கவுசாம்பி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று, நடுவழியில் தவறான நபரால் ஓட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பஸ் ஒன்று, கலாகார் பஸ் நிலையம் அருகே வந்தபோது, பஸ்சை நிறுத்திய டிரைவர் அதைச் சாவியுடன் விட்டு விட்டு கீழே இறங்கி எங்கோ சென்றுவிட்டார். பஸ்சில் சாவி இருந்ததையும், பஸ்ஸில் எந்த பாதுகாப்பும் இல்லாததையும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கவனித்துள்ளார்.
இதனால் பஸ்சில் ஏறிய அந்த வாலிபர், சாவி இருந்ததை உணர்ந்து, தானே பஸ்ஸை ஓட்டத் தொடங்கினார். பஸ் அப்சல்கார் பகுதியை நோக்கி வேகமாக சென்றதில், அதில் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பயணிகளின் அலறலுக்கும் பதற்றத்திற்கும் இடையே, சிலர் தங்கள் சொந்த வாகனங்களில் பஸ்சை தொடர்ந்து சென்றனர்.
சில கிலோமீட்டர் தொலைவு வரை பஸ்ஸை ஓட்டிய அந்த வாலிபர், பஸ்ஸை தவறான வழியில் செலுத்தியதால், அது சேற்றில் சிக்கி நின்றது. இதன்பின் பயணிகள் நிம்மதியடைந்தனர். சம்பவத்தில் பெரிதான விபத்து ஏற்படாதாலும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சில வாகனங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அலட்சியமாக நடந்துகொண்டதற்காக பஸ் டிரைவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். பஸ்ஸை ஓட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், கீழக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அமித் கிஷோர் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.