டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் 15 வயது சிறுவன் மீது அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த அந்த சிறுவனை, பள்ளி வாயில் அருகே மூவர் சூழ்ந்து சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். அங்கு அவர்கள் கொண்டு வந்த கத்தியால் சிறுவனை கடுமையாக குத்திவிட்டு தப்பி ஓடினர்.
அங்கு கத்திக்குத்து அடைந்த சிறுவன், நெஞ்சில் குத்திய கத்தியுடன் வலியுடன் அப்படியே அருகிலிருந்த பஹர்கஞ்ச் காவல் நிலையத்திற்குச் சென்று உதவி கேட்டுள்ளான். இதைக் கண்டு அதிர்ந்து போன காவலர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது அச்சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.இதுகுறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், சுமார் 10 நாட்களுக்கு முன்பு சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரியவந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் நடத்திய 3 மைனர் சிறுவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.