நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்படி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளியான இவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். வழக்கம்போல் சில நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டிற்கு மின்சார கணக்கீடு செய்ய மின்வாரிய ஊழியர் ஒருவர் வந்தார்.
மின்கணக்கீடு செய்யப்பட்ட பின், மாரியப்பனின் மொபைல் எண்ணுக்கு மின்கட்டண தகவல் குறுஞ்செய்தியாக வந்தது. அதனைப் பார்த்த அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் – மாதாந்திர மின்கட்டணமாக ரூ.1,61,31,281 எனப் பெரும் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது!
தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து மின்வாரிய அதிகாரிகளை நாடிய மாரியப்பன், பிழையைத் தெரியப்படுத்தினார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,
“அதிகப்படியான மின்கட்டணம் பதிவாகியிருப்பது உண்மைதான். இது தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனிதப் பிழையால் ஏற்பட்டுள்ளது. இது திருத்தப்பட்டு, சரியான மின்கட்டண விவரம் பதிவேற்றம் செய்யப்படும். தற்போது, மாரியப்பனின் மின்மீட்டரில் பதிவான மின்வினியோக அளவை மீண்டும் சரிபார்த்து கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது,” என தெரிவித்தனர்.
மேலும்,
“மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை இருப்பதால், அவுட்சோர்சிங் ஊழியர்களை நம்பி மின்கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது ஏற்பட்ட பிழையால் இத்தகைய கோளாறு ஏற்பட்டிருக்கலாம்,” என்றும் அவர்கள் கூறினர்.
இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.