கோவை ஜி.கே.எஸ். அவென்யூவை சேர்ந்த கிறிஸ்டோபர் எடிசன் என்ற நபர், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தனது குடும்பத்துடன் உப்பிலிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள பிரியாணி ஓட்டலுக்கு சென்றார். அப்போது அவர் முழு கிரில் சிக்கனும், தந்தூரி சிக்கனும் ஆர்டர் செய்தததாக கூறப்படுகிறது. உணவு பரிமாறப்பட்ட போது, அதில் முக்கியமான ‘லெக்பீஸ்’ இல்லை என்பதைக் கவனித்த அவர், ஊழியர்களிடம் கேட்க, உரிய பதில் அளிக்காமலும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
விவாதத்திற்கு பிறகு, சமையலறையிலிருந்து தாமதமாக லெக்பீஸ் துண்டுகள் கொண்டு வரப்பட்டதாகவும், இது ஒரு நியாயமற்ற வர்த்தகமாகும் எனவும் குற்றம்சாட்டிய கிறிஸ்டோபர், உணவுக்கான ரூ.1,196-ஐ திருப்பி வழங்குமாறு கோரி நுகர்வோர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். உணவு புகைப்படத்தில் காட்டப்படும் முறையில் உணவு வழங்கப்படவில்லையெனவும், வாடிக்கையாளர் உரிமைகள் மீறப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த கோவை நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர் மாரிமுத்து தலைமையில், ஓட்டல் உரிமையாளர் பாதிக்கப்பட்டவரின் மன உளைச்சலுக்காக ரூ.10,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5,000 வழங்க உத்தரவிட்டனர். ‘லெக்பீஸ்’ உரிமைக்காக கோர்ட்டு வரை சென்ற இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.