ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பாயி (45). கணவரை பிரிந்து மகள் திவ்யாவுடன் வசித்து வந்த இவர், குடும்ப சூழ்நிலையால் அவதிப்பட்டு வந்தார். திவ்யா (21), கணவரை இழந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தாயுடன் தங்கி மீன் வலை பின்னும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் ஏ.நெடுங்குளத்தை சேர்ந்த கொத்தனார் கருப்பசாமி (23), ராமநாதபுரத்தில் வேலைக்காக தங்கி இருந்தபோது திவ்யாவுடன் இரண்டாண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளார். அவர் அடிக்கடி திவ்யாவின் வீட்டிற்கு வருவது வழக்கமாக இருந்ததால், தாயாரான கருப்பாயி இதனை எதிர்த்து கண்டித்துள்ளார். இதனால் கருப்பசாமிக்கும், கருப்பாயிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
சமீபத்தில் திவ்யா, கருப்பசாமியுடன் எந்தவொரு உறவையும் வைத்துக் கொள்ளமாட்டேன் எனத் திட்டவட்டமாக கூறியதைக் கருப்பாயி தூண்டிவிட்டதாக கருதி, அதில் ஆத்திரம் கொண்ட கருப்பசாமி கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்தநிலையில், நேற்று இரவு திவ்யாவின் வீட்டிற்கு வந்த அவர், கருப்பாயியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திவ்யா தனது தாயை காப்பாற்ற அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், பரிசோதனை செய்த டாக்டர்கள் கருப்பாயி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிபடுத்தினர். இது தொடர்பாக திவ்யா போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கருப்பசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.