காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த பத்மாவதி சர்க்கரை ஆலையை ஹிதேஷ் ஷிவ்கன் பட்டேல் மற்றும் அவரது சகோதரர் தினேஷ் பட்டேல் நிர்வகித்து வந்தனர். இந்த ஆலையை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா ரூ.450 கோடிக்கு வாங்கியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும்,ஆலையின் உரிமம் சசிகலா பெயருக்கு மாற்றப்படாமல் பினாமி பெயரில் தொடர்ந்து செயல்பட்டது. இதனிடையே, சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கியில் ரூ.120 கோடி கடன் பெற்று பணமோசடியில் ஈடுபட்டது. இதுகுறித்து வங்கி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது.
அதில், 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், சசிகலா ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை ரொக்கமாக கொடுத்து ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை வாங்கியதும், உரிமையாளர்கள் அதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் உறுதி செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, 2019ல் சசிகலா வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனையிலும் இதுதொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், பினாமி பெயரில் சொத்துகளை குவித்தது சட்டவிரோதம் என்பதால், இந்த விவகாரத்தில் சசிகலா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.