கோவை: தமிழக அரசியல் சூழலில் தெருநாய்கள், சுற்றுச்சூழல் சமநிலை, மற்றும் தேசிய அரசியல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வித்தியாசமான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெருநாய்கள் தொடர்பான பிரச்சினை குறித்து பேசும்போது,“நம்முடைய நாட்டு நாய்களை வீட்டு வாசலில் பாதுகாப்புக்காக வளர்த்தோம். ஆனால் வெளிநாட்டு நாய்களை வீட்டுக்குள் கொண்டு வந்ததால் நம் நாட்டு நாய் தெருநாயாக மாறியது. இவை குறைந்த செலவிலேயே பராமரிக்கக் கூடியவை. மீதமுள்ள உணவை உண்ணும், ஆடு மாடு மேய்க்கச் செல்லும், வேட்டைக்குச் செல்லும்.
ஆனால் வெளிநாட்டு நாய்களை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து பிஸ்கட், தனி மருத்துவம், பெரிய செலவில் பராமரிக்கிறார்கள். அந்த நாய்களின் குட்டிகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இதனால் நம்முடைய நாய்கள் புறக்கணிக்கப்பட்டு தெருநாய்களாக மாறின.” என்றார்.
மேலும், தெருநாய்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டாம் என எச்சரித்த அவர்,“நாய்களை ஒழித்தால் எலிகள் பெருகும். அதனால் பிளேக் போன்ற கொடிய நோய்கள் மனிதர்களுக்கு பரவக்கூடும். மாநகராட்சிகள் நாய்களுக்கு தடுப்பூசி போட்டு, பராமரிக்க வேண்டும். எதையும் சமநிலையில் வைத்தால்தான் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், அரசியல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.“தமிழக வெற்றிக் கழகம் பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் கூறுகிறது. அப்படியானால் காங்கிரசையும் அதிமுகவையும் புனிதப்படுத்துகிறீர்களா? கச்சத்தீவை மோடி திருப்பித் தர வேண்டும் என்கிறீர்கள். ஆனால் அதை தாரைவார்த்தது யார்? நீட்டை எடுத்து விடுங்கள் எனக் கூறுகிறீர்கள். ஆனால் அந்த நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான்” என சாடினார்.
சீமான் பேச்சு தெருநாய்கள் பிரச்சினையிலிருந்து தேசிய அரசியலுக்கு வரை பரவியதால், அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு இடம் கொடுத்துள்ளது.