நகை திருட்டு வழக்கு: கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திய பாரதி திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்!
Seithipunal Tamil September 10, 2025 04:48 PM

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி, காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் பயணித்தபோது, அவரது 5 சவரன் செயினை மர்ம பெண் ஒருவர் திருடினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாரதி என்ற பெண்ணை கைது செய்தனர்.

விசாரணையில், பாரதி கடந்த 15 ஆண்டுகளாக செயின் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தில் தன் சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி வருவதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், திமுக ஊராட்சி மன்றத் தலைவியாக ஆன பின்னரும் திருட்டுப் பழக்கத்தை விட சொல்லி உறவினர்கள் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதனை நிறுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் திமுகவிற்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்திய நிலையில், திமுக தலைமைக் கழகம் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த அறிவிப்பில், “வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி, பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம், நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார்.

எனவே அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார். மேலும், அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.