மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் சமூக ஒற்றுமையில் சிறந்து விளங்க, பள்ளிகளில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காக கல்வித்துறை முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், பள்ளிகளுக்கு முக்கியமான புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில், சாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை பரப்பும் ஆசிரியர்கள் மீது வரும் புகார்களை, முதன்மைக்கல்வி அலுவலர்கள் உடனடியாக விசாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவசியமெனில் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை விவரங்கள் ரகசியமாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அவை பொதுவெளியில் தெரியாதவாறு பாதுகாக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ என்ற ஒற்றுமையை வளர்க்கும் திட்டம் பிரதானமாக செயல்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்ட நிலையில், யாராவது பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர் பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், திருக்குறள் அறநெறி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, அதில் வரும் புகார்களை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை நடத்தி மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரிடம் அறிக்கையாக அனுப்ப வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது.